வெட்டப்படுவாயா? தட்டப்படுவாயா?
லூக்கா 13:1-9
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
உலகில் வாழும் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளியே காட்ட வேண்டும். அப்படி வெளிக்கொணரும் நபர்களைத் தான் இந்த உலகம் தட்டிக்கொடுத்து பாராட்டுகிறது. இல்லையென்றால் இந்த உலகம் வெட்டுகிறது. இவர்களால் இந்த உலகில் வாழவே முடியாது. எல்லாரும் நன்கு வளர வேண்டும், கடவுள் கொடுத்த திறமைகளை வைத்து திறம்பட செயல்பட வேண்டும் என செல்லமாய் அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். மற்றவர்களால் நாம் பாராட்டப்பட வேண்டும் அல்லது தட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு செயல்களை நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.
1. பலன் கொடுக்கனும்
இதுவரை நாம் யாரெல்லாம் நன்கு பலன் கொடுத்து கொண்டிருக்கிறார்களே அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் எப்படி சோதனைகளை தவிர்க்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனிக்க வேண்டும். அவர்கள் எப்படி சோம்பலை விரட்டுகிறார்கள் என்பதைப் பார்த்து அந்த நுணுக்கங்களை நாம் விடாமல் பிடிக்க வேண்டும்.
2. பாரம் குறைக்கனும்
நாம் நம் கடமைகளை சரியாக செய்யும் போது நம்மை யாரெல்லாம் சுற்றி இருக்கிறார்களோ அவர்களுக்கு பாரம் குறையும். அவர்கள் நம்மைக் குறித்து மகிழ்வார்கள். நம் வாழ்க்கையின் தரம் உயரும். நம்மை பலர் பாராட்டுவார்கள். தட்டிக்கொடுப்பார்கள். அதில் வரும் சந்தோசத்தை அசை போடுவது அலாதி இன்பம்.
மனதில் கேட்க…
1. என் நிலைமை எப்படி உள்ளது – வெட்டப்படுவேனா? தட்டப்படுவேனா?
2. நம்மால் பிறருக்கு பாராம் ஏற்படாமல் பக்குவமாய் நடக்கலாமா?
மனதில் பதிக்க
நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்(யோவா 15:16)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா