விழிப்பாயிருப்போம்
”நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இயேசு நமக்கு அழைப்புவிடுக்கின்றார். யாரிடமிருந்து ஏமாறக்கூடாது? எப்படி ஏமாற்றுகிறவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வது? ஏமாறுகிறவர்களை தீர்ப்பிட முடியாதா? அவர்களின் தவறான செயல்களுக்கு, ஏமாந்து விட்டோம் என்று சொல்லி, தப்பிக்க முடியுமா?இன்றைக்கு தவறு செய்கிறவர்கள், நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அல்லது வெகு எளிதாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், தவறு செய்கிறவர்கள் எந்த வழியிலும் தாங்கள் செய்த தவறான செயல்களுக்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதோடு, எப்போதும் மற்றவர்கள் தங்களை ஏமாற்றாமல் விழிப்பாயிருந்து, நமது ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய உலகில் ஏராளமான இளைஞர்கள், தவறான வழிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் தவறான போதனைக்கு பலியாட்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கக்கூடியவர்களின் நயவஞ்சகப்பேச்சுக்கு மயங்கி தங்களது வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள். அதற்கான தண்டனை வருகிறபோது, அவா்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருத்தமடைகிறார்கள். தவறான பேச்சுகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஆளாகாமல், நமது ஆன்மாவை காத்துக்கொள்ளக்கூடிய கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது என்பதை, இயேசு தெளிவாகச் சொல்கிறார். நம்மை விழிப்பாயிருக்க அழைப்புவிடுக்கின்றார்.
நமது பிள்ளைகள் மட்டில் நாம் அக்கறை கொண்டவர்களாக, அவர்களது செயல்பாடுகள், சேர்க்கை ஆகியவற்றில் பெற்றோர்களாக, பெரியவர்களாக நாம் எப்போதும், விழிப்பாயிருப்பது அவசியமாகிறது. அந்த விழிப்புணர்வை நாமும் பெற்று, நமது பிள்ளைகளுக்கும் ஊட்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்