விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்!

இயேசுவின் இந்த உவமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். காரணம், திருமண விருந்துக்கு வர மறுப்பது என்பது சற்று வியப்பான செய்திதான். அதிலும் ஒவ்வொருவரும் சொன்ன சாக்குபோக்குகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஆம், இயேசு சொன்ன உவமையின் நோக்கமும் அதுதான். இறைவன் தருகின்ற விருந்தில் பங்கு கொள்வதற்கு நாம் மிகவும் தயங்குகிறோம். அதுவே வியப்புக்குரியதுதான். அதிலும் அத்தயக்கத்துக்கான காரணங்களாக நாம் முன்வைக்கும் காரணங்கள் அதிலும் வியப்புக்குரியவை என்பதை நமக்கு விழிப்பூட்டவே இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார்.

இறையாட்சியின் விருந்திற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த விருந்து நிறைவான, நிலையான, அழியாத விருந்து. அந்த விருந்தை நாம் திருப்பலியிலும், இறைமொழியிலும், இறை அனுபவங்களிலும் பெறுகிறோம். ஆனாலும், அந்த விருந்தின்மீது நாம் அதிக ஆர்வம் கொள்வதில்லை. மாறாக, அழிந்து போகின்ற உணவு, பொழுதுபோக்குகள், நிறைவற்ற உறவுகள்… இவற்றில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அத்துடன், இறையாட்சியின் விருந்தில் கலந்துகொள்ளாததற்கு நாம் ஆயிரம் சாக்குபோக்குகளைச் சொல்கிறோம். நேரமில்லை, களைப்பாக இருக்கிறது, மனநிலை சரியில்லை… இன்ன பிற சாக்குகளை எளிதாகச் சொல்லிவிடுகிறோம். இயேசு சொன்ன உவமை நமக்குத்தான் என்பதை உணர்ந்து, சாக்குபோக்குகளைக் களைந்து ஆர்வத்துடன் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்:

விருந்தின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் தருகின்ற செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் என்பதை உணர்ந்து, நீர் தரும் அழைப்புக்காக நன்றி கூறுகிறோம். இந்த அழைப்பை முழு மனதுடன் ஏற்று, உமது விருந்தில் தகுதியுடன் பங்குபெற எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.