விண்ணக வாழ்வு
இறப்பு என்பது இந்த உலகத்தின் கொடுமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் நம்முடைய அனுபவத்தில் அது உண்மையும் கூட. ஒருவருடைய இழப்பு எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இது இந்த உலக கண்ணோட்டம். அதே வேளையில், நாம் அடைய வேண்டிய இலக்கைப்பற்றிய தெளிவு நம்மிடம் இருந்தால், இந்த இழப்பின் ஆழம், ஓரளவுக்கு நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக கற்றுத்தருகிறார்.
இந்த உலகம் நாம் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இந்த உலகத்தைத் தாண்டிய இலக்கு தான் நமது இலக்கு. ஆனால், இந்த உலகத்தை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்: ”நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்”. ஆக, இயேசு சீடர்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய அனுபவம், அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தர வேண்டும் என்று, கூறுகிறார். தந்தையிடம் செல்வதுதான் அனைவரின் இலக்கு. தந்தையிடம் செல்வது வருத்தப்படக்கூடியது அல்ல. மாறாக, ஆனந்தப்பட வேண்டிய ஒன்று என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, இயேசு அவர்களோடு இல்லாத நிலை வருகிறபோது, சீடர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. மாறாக, இயேசு தந்தையிடம் செல்கிறார் என்பது குறித்து, அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
நமது வாழ்வு விண்ணகத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். மண்ணகம் நமது நிலையான இல்லம் அல்ல. இங்கு நாம் வாழ்வதன் அடிப்படையில் தான், நமது விண்ணக வாழ்வு அமைய இருக்கிறது. இந்த நிலையான வாழ்விற்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்ள, இந்த மண்ணகத்தில் நாம் முழுமுயற்சி எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்