விண்ணக உறைவிடம்
”என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன” என்று இயேசு சொல்வதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்படுகிறது. ஆரிஜன் என்பவரின் விளக்கத்தின்படி, மனிதன் இறக்கிறபோது, முதலில் அவர்களுடைய ஆன்மா, இந்த பூமியில் இருக்கிற ஓர் இடத்திற்குச் செல்கிறது அங்கு ஆன்மாக்களுக்கு பயிற்சியும், போதனையும் தரப்படுகிறது. அங்கு அவர்கள் தேர்ச்சிபெற்றவுடன், அந்த ஆன்மா விண்ணகத்திற்குச் செல்வதற்கு தகுதிபெறுகிறது. இப்படி ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கு ஏற்றாற்போல, விண்ணகத்தைப்பற்றிய செய்திகளைத் தருகிறார்கள்.
ஆனால், சற்று இறையியல்பூர்வமாக இந்த இறைவார்த்தையைச் சிந்தித்தால், ”என் தந்தை வாழும் இடத்தில் பல உறைவிடங்கள் உள்ளன” என்பதற்கு, விண்ணகம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த பூமியில் இருக்கக்கூடிய, மனிதன் தங்கக்கூடிய இடங்களில், சில சமயங்களில் அனைவருக்கும் போதுமான இடங்கள் இல்லாமல் இருக்கலாம். சத்திரங்களில் கூட்ட நெருக்கடியால், மக்கள் வெளியே நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். ஆனால், விண்ணகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாது. காரணம், அனைவரும் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகிறது. அனைவருக்குமே அங்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கடவுளின் அன்பு எல்லையில்லாதது. அந்த அன்பு தான் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுளின் அன்பை உணர்ந்து, அவரை ஏற்று வாழும் அனைவரும் நிலையான வாழ்வுக்கு தகுதிபெறுவார்கள். அந்த நம்பிக்கையோடு நமது வாழ்வை நாம் வாழ, இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்