விண்ணகத்தில் செல்வம் சேர்ப்போம்
”விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்ற இந்த இறைவார்த்தை யூதர்களுக்கு நன்றாக புரியக்கூடிய வார்த்தைகளாக இருந்தன. ஏனென்றால், யூதமக்கள் மத்தியில் யூத சமயத்தைத் தழுவிய ஓர் அரசரைப்பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதியாபெனேவைச்சார்ந்த மோனோபாஸ் என்கிற அரசர் தான் அவர். யூத சமயத்தைத் தழுவியவுடன் அவர் செய்த முதல் காரியம், தனது செல்வத்தையெல்லாம், பஞ்சகாலத்தில் ஏழைகளுக்குப்பகிர்ந்து கொடுத்தார். அதைப்பார்த்த அவருடைய சகோதரர்கள், ”நமது மூதாதையர்கள் அனைவரும் செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்த்து வைத்திருந்தார்கள். நீயோ, அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாயா?” என்று கடிந்துகொண்டார்கள். அதற்கு அரசர், நமது மூதாதையர் மண்ணகத்தில் செல்வத்தைச் சேர்த்து வைத்தனர். நானோ விண்ணகத்தில் சேர்த்து வைத்திருக்கிறேன். மண்ணகத்தில் சேர்த்து வைத்த செல்வத்தினால் நமக்கு பயன் ஒன்றும் இல்லை. விண்ணகச்செல்வம் நமக்கு நிலையான வாழ்வு தரும்” என்று பதிலளித்தாராம்.
இயேசு இந்த உவமையைச் சொன்னவுடன், நிச்சயம் அங்கிருந்தவர்களுக்கு, தங்கள் நடுவில் பிரபலமாயிருந்த இந்த கதை நினைவுக்கு வந்திருக்கும். இயேசுவும் சரி, யூதப்போதகர்களும் சரி, சுயநலத்தோடு சேர்த்து வைக்கப்படும் செல்வத்தினால் அழிவுதான் நேரிடும் என்பதில் தெளிவாக இருந்தனர். அதையே மக்களுக்குப் போதித்தனர். தொடக்க கால திருச்சபையில், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழக்கூடிய பழக்கம் வெகுவாக இருந்தது. ஒருமுறை உரோமை அதிகாரி ஒருவர், திருத்தொண்டர் லாரன்சியசிடம், ”நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தை எனக்கு காட்டும்” என்று கட்டளையிட்டாராம். உடனே லாரன்சியஸ், தாங்கள் பணிவிடை செய்கிற ஏழைகளையும், கைம்பெண்களையும் காட்டி, ”இவர்கள்தான் நாங்கள் சேர்த்து வைத்திருக்கிற செல்வம்” என்று பதிலளித்தாராம். ஆக, நாம் அனைவருமே விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நாட்களில் மக்கள் பணத்தை எதிர்காலத்திற்கும், அடுத்த தலைமுறையினருக்கும் சேர்த்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்களிடையே வாழக்கூடிய ஏழை, எளியவர்கள் மட்டில் அக்கறை இல்லாதவர்களாக வாழ்கின்றனர். உண்மையான செல்வம் என்பது, ஏழை, எளியவர்களிடத்தில் இரக்கம் காட்டுவதுதான். அப்போதுதான் நாம் விண்ணகத்திற்குள் நுழைய முடியும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்