விடாமல் விடாப்பிடியாக விரட்டு…
லூக்கா 11:5-13
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
எதையும் பெற வேண்டும் என்றால் தொடங்கிய முயற்சியை விடாமல் விடாப்பிடியாகத் தொடா்ந்து செய்யும் போது தான் வெற்றி என்பது கிடைக்கும். இறைவனிடம் இருந்து நாம் நம்முடைய வரங்களை பெற வேண்டும் என்றாலும் தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக கேட்க வேண்டும். அதுதான் வரங்களை வாரி வழங்குகிறது. ஆகவே இன்றைய நாள் நாம் தொடங்குகிற முயற்சி, செயல் எல்லாம் தொடா்ந்து விடாமல் விறுவிறுப்பாக போகட்டும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். அதை இரண்டு விதத்தில் நாம் ஆர்வமாக செய்யலாம்.
1. முடியும்
எதையும் செய்ய நம்மால் முடியும் என்ற உயா்ந்த எண்ணம் இருந்தாலே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிகிறது. எதையும் பின்வாங்காமல் முன்னோக்கி கடவுளின் துணையோடு சென்றால் எல்லாம் வெற்றிகரமாக அமைகிறது. முடியும் என்ற சாதனைக்காற்று முடியாது என்ற அசுத்தக்காற்றை விரட்ட வழிவகை செய்ய வேண்டும்.
2. விடியும்
நாம் தொடா்ந்து விரட்ட விரட்ட நாம் எதை செய்ய துடிக்கிறோமோ அதற்கான காலம் கண்டிப்பாக வரும். நமக்கு விடிவு என்பது கண்டிப்பாக உண்டு. முயற்சிக்கான பலன் கிடைக்க நாட்கள் பல ஆகலாம். ஆனால் பலன் வந்தே தீரும். ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தான் நமக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். அந்த ஊக்கம் நாம் ஆக்கம் பெற அருமருந்தாக இருக்கும்.
மனதில் கேட்க…
1. தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக விரட்டி நான் எதையாவது சாதித்திருக்கிறேனா?
2. முடியும், விடியும் என்ற இரண்டு உற்சாகம் தரும் வார்த்தைகளை அடிக்கடி நான் உச்சரிக்கலாமே?
மனதில் பதிக்க…
கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். (லூக் 11:10)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா