விசுவாசம்
இயேசு தன்னுடைய மூன்று சீடர்களோடு மலைக்குச் செல்கிறார். அங்கே உருமாறுகிறார். இந்த தருணத்தில் மற்ற சீடர்கள் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் எங்கே இருந்திருப்பார்கள்? அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இன்றைய நற்செய்தியிலே பார்க்கலாம். தொழில் பழகிக்கொண்டிருக்கிறவர்கள், முதலாளி இல்லாத சமயத்தில் கடையில் இருக்கிறபோது, ஒருவர் வந்து பொருள் கேட்கிறபோது, என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெரியாத மனநிலை தான், நிச்சயம் அங்கு இருந்த சீடர்களுக்கு இருந்திருக்கும்.
இயேசு இல்லை. ஆனால், தனது குழந்தைக்கு சுகம் வேண்டி, நம்பிக்கையோடு ஒருவர் வந்திருக்கிறார். தங்களால் இயன்ற மட்டும், இயேசுவை உடனிருந்து கவனித்ததை எல்லாம் செய்து பார்க்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அவர்களுக்குள் பயம். பேசாமல், முதலிலே முடியாது என்று ஒதுக்கிவிட்டிருக்கலாமோ? வீண் வம்பில் மாட்டிக்கொண்டு விட்டோமே? என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள். இயேசுவே! எங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நினைத்த நேரத்தில் நிச்சயம் இயேசு அங்கு வந்துவிட்டார். சீடர்களின் பயமனநிலையைப் பார்க்கிறார். அங்கே இருந்த கூட்டத்தைப் பார்க்கிறார். நடந்தது என்ன? என்பதைக் கண்டுபிடித்து விட்டார். செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு, தன்னுடைய சீடர்களை கடிந்து கொள்கிறார். நம்பிக்கை கொள்ள வலியுறுத்துகிறார். சீடர்களுக்கு இயேசுவின் கோபம் பெரிதாக இல்லை. அவரை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். தாங்கள் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டது ஒருபுறம். இயேசுவைப் பற்றிய ஆச்சரியம் மறுபுறம். ஆம். அதுதான் இயேசு.
நம்மை சோதனைகளிலிருந்தும், நெருக்கடி நிலையிலிருந்து காப்பாற்ற வல்லவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நமக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான். அது தான் விசுவாசம். அந்த விசுவாசத்தை நாம் இயேசுவிடம் பெற்றுக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்