விசுவாசத்தளர்ச்சியை அகற்றுவோம்
தீய ஆவி பிடித்திருந்த பையனுடைய தந்தை இயேசுவைத்தேடி நம்பிக்கையோடு வந்திருந்தார். ஆனால், இயேசு தன்னுடைய மூன்று சீடர்களோடு உயர்ந்த மலைக்குச்சென்றுவிட்டார். எனவே, அந்த தந்தை சீடர்களின் உதவியை நாடுகிறார். ஆனால், சீடர்களால் அந்த பையனுக்கு குணம் தரமுடியவில்லை. நம்பிக்கையோடு வந்திருந்த அந்த தந்தை நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார். அந்த நம்பிக்கையின்மைதான் இயேசு அங்கே வந்தபொழுது, அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எனவேதான், “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று சொல்கிறார். இயேசுவால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கையோடு வந்தவர், நம்பிக்கையிழந்து வாடுகிறார்.
இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு மீண்டும் நம்பிக்கையை தருகின்றன. ‘என்னுடைய ஆற்றலால் அல்ல, மாறாக உம்முடைய நம்பிக்கையினால்தான் எல்லாம் நிகழும்’ என்று நம்பிக்கையின் ஆழத்தை, அதன் மகத்துவத்தை அந்த தந்தைக்கு உணர்த்துகிறார் இயேசு. அவரின் நம்பிக்கை மீண்டும் வலுப்பெறுகிறது. தன்னுடைய தவறை உணர்ந்து, நம்பிக்கையின்மையை நீக்க மீண்டும் இயேசுவின் உதவியை நாடுகிறார். இயேசு நினைத்திருந்தால், தீய ஆவியை ஓட்டிவிட்டு அவரின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம். ஆனால், அது உண்மையான நம்பிக்கையை அந்த மனிதரிடத்தில் வளர்த்திருக்காது. மேலும், கடவுளின் அருளைப்பெற விரும்புகிறவர்கள், நம்பிக்கை இல்லாமல் எதையும் பெற முடியாது என்பதையும் உணர்த்த வேண்டிய கட்டாயம் இயேசுவுக்கு இருந்திருக்க வேண்டும். எனவேதான், அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தி, அவரின் வாழ்க்கையில் அற்புதத்தை, அதிசயத்தை காணச்செய்கிறார்.
விசுவாசத்தளர்ச்சி என்பது எல்லோருடைய வாழ்விலும் வரக்கூடிய இயல்பான ஒன்று. அந்தவேளையிலும் கடவுளின் துணையை நாடுவதுதான், நம் விசுவாசத்தை மீண்டும் வளர்த்தெடுக்க உறுதுணையாக இருக்கும், இறை ஆற்றலை உணர உதவியாகவும் இருக்கும். எல்லா வேளைகளிலும் இறைவனைப்பற்றிக்கொள்ளும் வரம் கிடைத்திட இறைவனை வேண்டுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்