வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.சாலமோனின் ஞானம் 1 : 13
கடவுள் இந்த உலகத்தில் ஆதாமையும்,ஏவாளையும்,தமது சாயலாக படைத்து அவர்களை நோக்கி இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார். ஆனாலும் நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அப்படி புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர்களோ ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் அந்த பழத்தை சாப்பிட்டதனால் சாவை சந்தித்தனர். ஆனாலும் நாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையே ஆண்டவர் விரும்புகிறார்.
ஆண்டவரின் ஆவி இந்த உலகை நிரப்பியுள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது.தண்டனை வேளையில் நீதியின்று தப்ப முடியாது. ஆகையால் இயேசு இந்த உலகில் மானிட அவதாரம் எடுத்து நாம் யாவரும் வாழ்ந்திருக்கும்படி அவர் நம்முடைய பாவங்களையும்,அக்கிரமங்களையும் சிலுவையில் சுமந்து தமது உயிரை நமக்காக கொடுத்து நம்மை மீட்டுள்ளார்.
அவரை நம்புவோர் உண்மையை அறிந்து கொள்வர். அவரின் அன்பில் நம்பிக்கை கொள்வோர் என்றென்றும் அவரோடு நிலைத்திருப்பர். அருளும்,இரக்கமும்,அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். இறைபற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள். ஏனெனில் ஆண்டவரை அவர்கள் எதிர்த்தார்கள்.சா . ஞானம் 3:9,10
ஆண்டவர் நம்முடைய அழிவில் மகிழாமல் நம்முடைய சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் மகிழ்வார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.பிலிப்பியர் 2 : 6 to 8.
அன்பானவர்களே! இந்த உண்மை தெய்வத்தின் அன்பின் வழியில் நாம் ஒவ்வொருவரும் நடந்து அவருக்கே துதியை செலுத்தி அவர் விரும்பும் காரியங்களை செய்து அவருக்கே மகிமையை செலுத்துவோம்.
எல்லாம் வல்ல இறைவா!
தொடக்கமும், முடிவும் ஆனவரே, அகரமும்,னகரமும் நானே” என்றவரே, உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். நாங்கள் வாழ்ந்திருக்கும்படி உமது ஜீவனை தந்தவரே, உம்மையே ஆராதிக்கிறோம். நீர் என்றென்றும் வாழ்கிற தேவனாய் இருக்கிறீர். அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். எங்கள் விண்ணப்பத்தைக் கேட்பவரே, எங்கள் ஜெபங்களுக்கு பதில் தருபவரே, உமக்கு நன்றி சொல்கிறோம். எங்களுக்காக அடிமையின் கோலம் எடுத்தவரே உம்மை வாழ்த்துகிறோம். எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பவர் நீரே, சமாதானத்தை அளிப்பவரே, உமக்கே துதி,கனம், மகிமை செலுத்துகிறோம். ஆமென்!அல்லேலூயா!!