வாழ்வை வளமாக்கும் இயேசு
இந்த இயேசு நோயையும் பசியையும் போக்கி மனித வாழ்வை வளமாக்கும் தெய்வம். இயேசு இருக்கும் மலைக்குச் செல்வோம். மக்கள் கூட்டத்தோடு ஒருவராக நாமும் செல்வோம். இயேசுவைத்தேடி மலைக்குச் சென்ற பெருங்கூட்டத்தில் பல்வேறு நோயுற்றோரும் இருந்தனர். இயேசுவோடு மணிக்கணக்காக நாள்கணக்காக தங்கியுள்ளனர். அவரோடு தங்கி, அவர் செய்த அருஞ்செயல்களைக் கண்டு வியந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
இறைவனோடு இருந்து இறைவனை போற்றிப் புகழ்ந்து செபிக்கும் மக்கள் மீது பரிவுள்ளவர் நம் இறைவன். அவர்கள் பசியாலோ நோயாலோ அவதிப்படுவதை அவரால் தாங்க முடியாது. தன்னைத் தேடி வந்தோரைத் தவிக்க விடமாட்டார். வாழ்க்கைப் பயணத்தில் வழியில் தளர்ச்சியடைந்துவிட இந்த இயேசு விரும்புவதில்லை. இடம் பாலை நிலமாயினும், நேரம் பொழுது போன நேரமாயினும் தன் மக்களைத் தவிக்க விடாதவர் நம் தெய்வம்.
இந்த இறைவன் இயேசுவைத் தேடி தொடர்ந்து வரவேண்டும். அவரோடு தங்க வேண்டும். நாளும் பொழுதும் பாராது அவரோடு தங்க வேண்டும். எல்லா சூழலிலும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து செபிக்;கும் பக்தனாகப் பின் தொடர்ந்தால், நம் உடலின் நோயை நீக்குவார். உள்ளத்தின் தளர்ச்சியைப் போக்குவார். பசியை, பற்றாக்குறையை போக்கப் பலுகச்செய்வார். இந்த இயேசு நம்மைத் தேடி வரும் இக் காலத்தில் அவரைத் தேடி, தொடர தயாராவோம்.
–அருட்திரு ஜோசப் லியோன்