வாழ்வு வழிபாடாக மாறட்டும்
லேவியர் புத்தகத்திலே, 11வது அதிகாரத்தில் எவையெவை சாப்பிடக்கூடியவை, எவையெவை சாப்பிடக்கூடாதவை என ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இறந்த மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. பல காரணங்களை நாம் சொல்லலாம். 1. யூதர்கள் தீய ஆவிகளை நம்பினர். இறந்துபோன உடல்மீது தீய ஆவிகளின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தால், தவிர்த்தனர். 2. ஒரு சில விலங்குகள் வேறு மதத்தில் உள்ளவர்களுக்கு புனிதமானவையாக இருந்தன. உதாரணமாக, பூனையும், முதலையும் எகிப்தியர்களுக்கு புனிதமானவை. வேறு மதத்தினர் வழிபடுவது, நிச்சயமாக யூதர்களுக்கு தீட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கும்.3. சில விலங்குகளின் இறைச்சி, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு திங்கிழைக்கக்கூடியதாக இருந்தது. பன்றியின் இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிடாவிட்டால், அது பல வழிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, அதுபோன்று கேடுவிளைவிக்கக்கூடிய இறைச்சியை தவிர்த்தனர். 4. சில மூடநம்பிக்கைகளின் காரணமாகவும், சில விலங்குகளின் இறைச்சியை, யூதர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்தப்பிண்ணனியில் தான் இயேசுவின் போதனையை நாம் பொருத்திப்பார்க்க வேண்டும். இயேசுவினுடைய வார்த்தைகள் வெறும் எச்சரிக்கை அல்ல: அது ஒரு புரட்சி. யூத மதத்தினுடைய அடிநாதத்தையே அறுக்கக்கூடிய வார்த்தைகள். பழைய ஏற்பாட்டு லேவியர் புத்தகத்தில் உள்ள, உணவு பற்றிய ஒழுங்குகள் அனைத்தும் முற்றிலுமாக வீண் என்று சொல்லி, பரிசேயர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வார்த்தைகள். ஆனால், இயேசுவைப்புரிந்துகொண்டால், அவர் சொன்ன வார்த்தைகளின் ஆழ்ந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும். சட்டத்தை வெறும் சம்பிரதாயமாக கடைப்பிடித்ததுதான் இயேசுவின் இந்த கோபத்திற்கு காரணம். கரும்பின் சுவை கரும்புச்சாற்றில்தான், அதன் சக்கையில் அல்ல. சட்டத்தின் பயன் அதன் பொருளில், வெறும் வார்த்தையில் அல்ல. இதுதான் இயேசு கற்றுத்தரும் பாடம்.
“பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று இயேசு சொல்வதின் பொருளும் இதுதரன். நம்முடைய வழிபாடுகளும், நம்முடைய பக்திமுயற்சிகளும் நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒவ்வொரு செயலும் கண்டிக்கத்தக்கவை. ஒன்றுக்கும் உதவாதவை. வாழ்வை மாற்றக்கூடிய அர்ததமுள்ள பக்திமுயற்சிகளில் ஈடுபடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்