வாழ்வு தரும் வழிபாடு
இந்த உலகத்தில் நமது உழைப்பு அனைத்துமே இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் என்று பொதுவாக சொல்வார்கள். மனிதரின் அடிப்படைத்தேவைகளாக இந்த உணவை, முதன்மைப்படுத்துவார்கள். அந்த உணவுத்தேவை நிறைவடைகிறபோது, மற்ற தேவைகள் தலைதூக்குகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி, கடவுளைப்பற்றியும், அவருடைய மாட்சிமைபற்றியும் நாம் சிந்திக்கிறபோது, உணவு ஒரு பொருட்டாகவோ, தடையாகவோ இருக்க முடியாது. கடவுளைப்பற்றி சிந்திப்பதே நமக்கு நிறைவைத்தரும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு விளக்கம் தருகிறது.
இயேசுவைத்தேடி அங்கே பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இயேசு சொல்வதைக்கேட்பதற்காகவே வந்திருக்கிறார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இயேசு வந்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு, அடுத்த வேளையைப்பற்றி எண்ணாமல், அந்த பாலைநிலத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே வந்தபிறகும், அவர்களுக்கு எந்த தேவையும் எழவில்லை. அந்த பாலைநிலத்தில், பகல் முழுவதும் இயேசுவோடு அமர்ந்திருந்தார்கள் என்பது நிச்சயம் நமக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது. அதுதான் இறைவார்த்தையின் மீதுள்ள தாகம். அதுதான் கடவுளின் மீது நாம் வைத்திருக்கிற ஆழமான விசுவாசத்தின் வெளிப்பாடு.
இன்றைக்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக திருப்பலியோ, வழிபாடோ நடக்க ஆரம்பித்தாலே, நாம் நெளிய ஆரம்பித்து விடுகிறோம். ஞாயிற்றுக்கிழமை திருப்பலி என்றாலும், நமது பிள்ளைகளை சிறப்புப்பயிற்சிக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஏதோ ஒப்புக்கு ஆலத்திற்கு நாம் வருகிறோம். இது நமது விசுவாசத்தை எந்த விதத்திலும் வளர்க்கப்போவதில்லை. இறைவார்த்தையின் மகிமையை, மகத்துவத்தை நமக்கு உணர்த்தப்போவதில்லை. வழிபாட்டை ஏதோ கடமையாக எண்ணாமல், வாழ்வாக உணர்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்