வாழ்வு தரும் இறைவார்த்தை
இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது.
இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை, இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு தான், தனது வாழ்வை அமைத்துக்கொள்கிறார். இறைவார்த்தையை வாழ்ந்து காட்டுகிறவர் பேறுபெற்றவர் என்றும் சொல்கிறார். இவ்வாறு, இறைவார்த்தையை நமது வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இயேசு கொடுக்கிறார்.
வாழ்வு தரும் இறைவார்த்தை, இயேசுவின் வாழ்வில் வாழ்வாகியது போல, நமது வாழ்விலும் அது முழுமையானதாக மாற வேண்டும். அந்த இறைவார்த்தை நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய அளவுக்கு, அது சிறப்பான இடத்தை பெற வேண்டும். அது நமது வாழ்வை சீர்படுத்துவதாகவும், நெறிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்