வாழ்வு தரும் இறைவார்த்தை
இயேசு தன்னுடைய வார்த்தைகளைச் சீடர்களின் மனதில் நன்றாகப் பதிப்பதற்கு சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட தருணத்திலே, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள். ஆனால், அதற்கு பிறகு, அவர்கள் இயேசுவிடமிருந்து அவ்வளவாக கற்றுக்கொண்டது போல தெரியவில்லை. இயேசுவையும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான், தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொண்டது, அதிகாரம், பதவிக்காகப் போட்டியிட்டது போன்ற நிகழ்வுகள். ஆக, சீடர்கள், இயேசுவின் வார்ததைகளை, தங்களுக்கானது என்ற எண்ணம் இல்லாமல், யாருக்காகவோ போதிக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், இயேசு அவரது வார்த்தைகளை உள்ளத்தில் பதிக்குமாறு கூறுகிறார்.
இயேசுவின் வார்த்தைகள் வெறுமனே கேட்டு, காற்றில் விடுவதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். அது நம் வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வை மாற்றக்கூடிய வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நாம் உள்ளத்தில் பதித்து, அதனை சிந்தித்து அதன்படி வாழ்ந்தால், நமக்கு ஏராளமான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். அன்னைமரியாள் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அவற்றை வெறுமனே, கேட்டு விட்டுவிடவில்லை. அவற்றைச் சிந்திக்கிறாள். தியானிக்கிறாள். அதனை அப்படியே ஏற்று வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறார். அதனால் தான், இயேசுவின் முதல் சீடராக அறியப்படுகிறார்.
நமது வாழ்விலும் இறைவார்த்தையை கடமைக்கு வாசிப்பதை விட்டுவிட்டு, அது வாழ்வு தரக்கூடிய வலிமையுள்ள வார்த்தை என்ற நினைப்போடு, வாசிப்பதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். அந்த வார்த்தைகளின்படி, நமது வாழ்வை அமைத்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ, இந்த நற்செய்தியை வாழ்வாக்குவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்