வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்
ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் பேசுகிறார்? ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும்.
சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு பலன்களையும் இயேசு சீடர்களிடம் எதிர்பார்க்கிறார்.
திருமுழுக்கு பெற்றிருக்கிற அனைவருமே நற்செய்தி அறிவிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அனைவருடைய வாழ்வும் இந்த இரண்டு பலன்களை உலகிற்கு தர வேண்டும். அவர்கள் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அவர்களின் வாழ்வும் மற்றவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனது வாழ்வு இந்த இரண்டு பலன்களையும் தருவதாக இருக்கிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்