வாழ்வின் துன்பம் கற்றுத்தரும் பாடம்
இயேசு கலிலேயா மற்றும் சமாரியா எல்லைப்பகுதியில், பத்து தொழுநோயாளிகளைச் சந்திக்கிறார். அதில் ஒருவர் சமாரியர். அவர்களுக்குள் நிச்சயம் ஓர் உரையாடல் நடைபெற்றிருக்க வேண்டும். இயேசு அவர்களிடம் உறவாடியிருக்க வேண்டும். அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள், எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு திருமணமாகி விட்டதா? அவர்கள் எப்படி இந்த நோயால் தாக்கப்பட்டார்கள்? என்பதெல்லாம், நிச்சயம் கேட்டு அறிந்திருப்பார். அதனால் தான், கடைசியில், இந்த அந்நியனைத்தவிர வேறு யாரையும், நன்றி சொல்லக் காணோமே? என்று, அவனை அடையாளப்படுத்த, இயேசுவால் முடிந்தது.
பொதுவாக, யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் சமாதானம் கிடையாது என்பது நாம் அறிந்தது தான். ஆனால், இங்கே அவர்கள் ஒரே குழுவாக வருகிறார்கள். அவர்களுக்கு வந்த துன்பம், அவர்களிடையே இருந்த, அந்த வேற்றுமையை, வெறுப்புணர்வை களைந்து விட்டது. ஆனால், இறைவனிடமிருந்து ஆசீரைப்பெற்று, குணமடைந்தவுடன், அவர்களுக்குள் இருந்த அந்த வேறுபாடு, மீண்டும் தளைத்தோங்குகிறது. மனிதனுக்குள் இருக்கக்கூடிய தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பீடு, மற்றவர்களை தாழ்வாக நினைப்பது, தான் என்கிற எண்ணம், இவையனைத்துமே, நாம் நன்றாக இருக்கிறபோது, தலைதூக்குகிறது. எனவே, நாம் நன்றாக இருக்கிறபோது, வளமையாக இருக்கிறபோது, நம்மிடம் இதுபோன்ற, எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது.
நாம் வளமையாக இருக்கிறபோது, நம்மை பலபேர் கவனிக்கலாம். நம்மோடு உறவாட, உரையாட விரும்பலாம். ஆனால், நாம் வாழ்வின் துன்பத்தில் இருக்கிறபோது, நம்மோடு உறவாடுகிறவர்களே, உண்மையான உறவுகள். அந்த உண்மையான உறவுகளை அடையாளம் காண, நாம் சந்திப்பது தான், துன்பம். ஆக, துன்பம் நமக்கு பல வாழ்வியல் பாடங்களைக் கற்றுத்தருகிறது. துன்பத்திலும் நாம் பாடம், அதிலும் மகிச்சிறப்பான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்