வாழ்வின் சோதனைகள்
1யோவான் 2: 18 – 21
சோதனை என்பது வாழ்வின் எல்லாருக்கும் வரக்கூடியது. ஒரு சிலர் சோதனைகளைத் தாங்க முடியாமல், அந்த சோதனைகளுக்கு பலியாகி விடுகின்றனர். ஒரு சிலர் அதனை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் சிலர், சோதிக்கிறவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இன்றைய வாசகம், இப்படிப்பட்டவர்கள் மட்டில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, நமக்கு பல்வேறு சோதனைகள் வரும். கிறிஸ்துவுக்கு எதிராக இருக்கிறவர்கள் இந்த சோதனைகளை நமக்கு ஏற்படுத்துவார்கள்.
நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முயற்சி எடுப்பார்கள். நாம் அவர்களின் சோதனைகளுக்கு பலியாகி விடக்கூடாது என்பது தான், யோவான் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஏனென்றால், எதற்காக நாம் இதுவரை காத்திருந்தோமோ, அந்த காலம் வந்து விட்டது. கிறிஸ்துவுக்காக காத்திருந்த காலம் கனிந்து விட்டது. இந்த காலத்திற்காகத்தான் இவ்வளவு நாட்கள் நம்மையே நாம் தயாரித்துக் கொண்டு இருந்தோம். இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த நாம், இந்த சோதனையான காலத்திலும் பொறுமையாக இருந்தால், நிச்சயம் நாம் கிறிஸ்து நமக்காக ஏற்பாடு செய்திருக்க விண்ணக பேரின்ப விருந்தில் கலந்து கொள்ள முடியும்.
கிறிஸ்துவில் இணைந்திருப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல. பல்வேறு சோதனைகளை எதிர்த்து துணிவோடு போராடக்கூடிய கடமை, நமக்கு இருக்கிறது. அந்த சூழ்நிலையில் நாம் சோதனைகளுக்கு பலியாகிவிடாமல், துணிவோடு, விடாப்பிடியாக விசுவாசத்தைப் பற்றிப்பிடித்துக் கொள்வோம். நம் ஆண்டவர் தரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்