வாழ்வின் அணுகுமுறை
நமக்குப்பிடித்தமான திரைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று யாராவது, கத்தினாலோ, பேசிக்கொண்டிருந்தாலோ, நமக்கு எரிச்சல் வருவது நிச்சயம். யாரென்றாலும், உடனடியாக நமது கோபத்தை வெளிப்படுத்திவிடுவோம். இயேசு மிகப்பெரிய போதகர். அவரைப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது போதனையைக் கேட்ட கிடைத்த, பொன்னான வாய்ப்பை, யாரும் நிச்சயம் நழுவ விடமாட்டார்கள். கேட்போரை, மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டுகிற போதனை அது. அந்த சமயத்தில், யாராவது இடைஞ்சலாகப் பேசினால், நிச்சயம் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அந்த கோபம் தான், பார்வையற்ற பா்த்திமேயுவைத் தாக்குகிறது.
பர்த்திமேயு பார்வையற்ற குருடன். பிச்சைக்காரன். பார்வையற்றவர்கள் மற்றவர் உதவியோடு தான் வாழ வேண்டியுள்ளது. அதிலும், பார்வையை இழப்பது, மிகப்பெரிய கொடுமை. நன்றாக வாழ்ந்த பர்த்திமேயு, பார்வையோடு வாழ்ந்த பர்த்திமேயு, இப்போது பார்வையிழந்தவனாக, பிச்சை எடுத்து வாழக்கூடிய கோரநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். வாழ்வு நமக்கு எந்த நேரமும் ஒரேபோல இருப்பதில்லை. ஒரே இரவில் பணக்காரனாக மாறியவர்களும் உண்டு. ஒரே இரவில் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்தவர்களும் உண்டு. வாழ்ந்து கெட்டவர்கள் இந்த உலகத்தில் ஏராளம். ஏராளம். அவர்களில் ஒருவன் தான் இந்த பர்த்திமேயு. எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து வாழ இயேசுவின் அணுகுமுறை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கை எப்போதும் மாறலாம்.
ஆக, ஒவ்வொருவரையும் அவரவர் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வதுதான், சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இன்றைக்கு மற்றொருவருக்கு இருக்கும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படலாம். இந்த வாழ்வு நிலையில்லாதது என்பதை நாம் உணர வேண்டும். அதற்கேற்ப நமது வாழ்வை, வாழ்வின் அணுகுமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்