வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்
2குறிப்பேடு 24: 17 – 25
அரசர் யோவாஸ் அடிப்படையில் ஒரு பலவீனமான மனிதன். யாருடைய எடுப்பார் கைப்பிள்ளையாகவும் இருந்தான். சரியான வழிகாட்டிகள் இருந்தால், சரியான பாதையில் சென்றான். தவறான வழிகாட்டுதல் இருந்தபோது, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தான். யோயாதா இருக்கும்வரை, அரசன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி பார்த்துக்கொண்டார். அரசரும் யோயாதா கூறியபடி, படைகளின் ஆண்டவராம் இறைவனுக்கு உண்மையாக இருந்தார். ஆனால், அவருக்குப்பின், தம்மைப் பணிந்து நின்ற இஸ்ரயேலின் தலைவர்களுக்கு இணங்கி, தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும், சிலைகளையும் வழிபட ஆரம்பித்தான். மக்களையும் வழிபட வைத்தான். இது வாக்குறுதிகளை மனிதன் எப்படி மேலோட்டமாக கடவுளுக்கு வழங்குகிறான் என்பதன் வெளிப்பாடாக இருக்கிறது.
வாக்குறுதி என்பது ஒரு மனிதரின் அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கொடுக்கிற வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது வாழ்வியல் மதிப்பீடாக, விழுமியமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்கிற எண்ணம் ஒருவருக்குள் எழும். ஏனோதானோவென்ற மனநிலை கொண்டிருந்தால், நிச்சயம் கொடுத்த வாக்குறுதி மேலோட்டமானதாகத்தான் இருக்கும். இஸ்ரயேல் மக்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்தனர். அவர்களை அழைத்த இறைவன் தன்னுடைய வார்த்தைகளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அப்படி இல்லை என்கிற வேதனையான உண்மையை இந்த பகுதி நமக்குக் கற்றுத்தருகிறது.
வாழ்வில் நாம் செய்யும் தவறுகளிலிருந்து பாடங்களைக்கற்றுக் கொள்ள வேண்டும். தவறு செய்தபின் அதிலிருந்து மீண்டு எழுந்து, மீண்டும் அதே தவறை செய்யாமலிருக்க முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் உண்மையான வாழ்க்கை. கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வாழ இறைவனின் ஆசீர் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்