வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டம்
மத் 21 : 33-43, 45-46
கொடிய குத்தகைதாரர் பற்றிய இவ்வுவமை பரிசேயர்களுக்கும், தலைமை குருக்களுக்கும் அவருடைய காலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது இன்று நமக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஆண்டவர் பலவழிகளில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். ஆனால் நாம் தொடர்ந்து அவரை எதிர்க்கிறோம். அல்லது கண்டும் காணாதது போல் இருந்து அவரைக் கொலை செய்வதற்கு நாமும் காரணமாகி விடுகிறோம். மிக சுருக்கமாக இந்த உவமையின் விளக்கத்தினை அறிந்து கொள்வோம்.
- திராட்சைத் தோட்டம் – நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை
- சுற்றிலும் வேலி – திரு அவை (நம்மை பிற தப்பறைகளிலிருந்து பாதுகாக்க)
- பிழிவுக்குழி – நமக்குள் மிகச் சிறந்தவற்றை இறைவன் வைத்துள்ளார். இதனை வெளியே
கொண்டுவர சவால்களையும், தடைகளையும் நமக்குத் தருகிறார். - காவல் மாடம் – புனிதர்கள், ஆயர்கள், குருக்கள் இவர்களைக் கொண்டு தொலை தூரத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார்.
நமது வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தை இவ்வளவு பராமிப்புகளோடு குத்தகைக்கு நம்மிடம் விட்டவர் நமது கடவுள். குத்தகைக்கு விட்டவர் கண்டிப்பாகப் பலனை எதிர்பார்ப்பார் தானே? இது அவருடைய உரிமையன்றோ? ஆனால் நாம் அவரது திராட்சைத் தோட்டங்களில் அவரது மதிப்பீடுகளையும், வார்த்தைகளையும் கொலை செய்கின்றோம். ஒரு முறை அவரது மகனை அனுப்பியவர் இன்று தொடர்ந்தும் நாம் பலன், கனி தந்து விடுவோமா? என்ற எதிர்பார்ப்புடன் சில மனிதர்களையும் சில கருவிகளையும் அனுப்புகின்றார். இவற்றில் ஒன்றுதான் நம்மைக் கண்டிப்போடு வழிநடத்துகின்ற இத்தவக்காலம். இத்தவக்காலத்தின் முறைமைகளை (ஈதல், செபித்தல், நோன்பு) ஏற்று, அவரது மகனின் சாவிற்கு நாம் காரணமாகாமல் இருப்போம்.
~ திருத்தொண்டர் வளன் அரசு