வாழ்க்கையின் வலிமை
யாக்கோபு 5: 9 – 12
வாழ்க்கையின் வலிமை
நீங்கள் வெளிப்படுத்துகிற நேர்மை, உங்களின் வாய்மையிலும் வாழ்க்கையிலும் இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் கொடுக்கிற சத்தியத்தில் அல்ல, என்பதுதான் யாக்கோபு சொல்லவருகிற செய்தி. ஒருவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தர வேண்டுமே தவிர, அவர் கொடுக்கிற சத்தியம் அல்ல. ஒருவர் சத்தியம் கொடுத்தால், தன்னுடைய வாழ்வில் கொண்டிருக்கிற நேர்மையை இழந்தவராக இருக்கிறார். அவருடைய நேர்மை நம்பத்தகுந்ததாக இல்லை என்பதால் தான், அது சத்தியமாக வெளிவருகிறது.
மத்தேயு நற்செய்தியில் ஐந்தாவது அதிகாரத்தில், மலைப்பொழிவில் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்த போதனையில் ஒன்று, யாக்கோபு இந்த பகுதியில் அறிவுரையாகச் சொல்வது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மத்தேயு நற்செய்தி 23 வது அதிகாரத்தில், பரிசேயர்களின் சட்டநூல்களில் “ஆணையிடுவதைப்“ பற்றிச் சொல்வதைக் கடுமையாகச் சாடுகிறார். ஆணையிடுவதில் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று ஒரு சிலவற்றையும், ஆணையிட்டாலும் விலக்கு வாங்கிக்கொள்ளலாம் என மற்றொரு பிரிவாகவும், தங்களுக்குச் சாதமாக சட்டத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தனர். சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகவும் இருக்க வேண்டும், அதேவேளையில் தங்களுக்குச் சாதகமான காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதாகவும் இருக்க வேண்டும். இதுதான் அவர்களுடைய நோக்கம். இதைத்தான் இயேசு கடுமையாகச் சாடுகிறார். அதையே யாக்கோபும் விளக்கமாகச் சொல்கிறார்.
நம்முடைய வாழ்வு நம்பத்தகுந்ததாக இருந்தால், யார் மீதும் நாம் ஆணையிட வேண்டியதில்லை. ஏனென்றால், நம்முடைய வார்த்தை தூய்மையானதாக இருக்கிறது. வேறு யார் மீதும் நாம் பழிபோடப்போவதில்லை. எதற்காகவும் நாம் விதிவிலக்கு கோரப்போவதில்லை. ஏனென்றால், அது நம்முடைய நேர்மைக்கும், வாழ்க்கை விழுமியத்திற்குமான சவால். எனவே, நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு நம்பத்தகுந்ததாக விளங்கும்படி வாழ, மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்