வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுங்கள்
மாற்கு 9:30-37
இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 25ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நமக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உண்டு. தழிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்குமா என்ற கனவு கண்டதும் உண்டு. அதுவெல்லாம் பெரிதல்ல. யார் ஒருவர் வாழ்க்கையின் முதலமைச்சர் ஆகுகிறாரோ அவரே அனைத்தையும் வென்றவர். அவர் ஒருவருக்கே இந்த உலகம் சொந்தம். அவர் ஒருவரே சிகரத்தை எட்டிப்பிடித்த சிறப்பான மனிதர் ஆவார். வாழ்க்கையின் முதலமைச்சராக மாறுங்கள். முயன்றால் உங்களால் கண்டிப்பாக முடியும் என்ற உற்சாக வார்த்தைகளோடு வந்திருக்கிறது பொதுக்காலம் 25ம் ஞாயிறு.
யார் வாழ்க்கையின் முதலமைச்சர்? தன்னைப் போன்று அடுத்தவர்களை நினைப்பவா்களையும் நேசிப்பவர்களையுமே நாம் முதலமைச்சர்கள் என்று சொல்ல முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியிலே ஒருவர் முதலமைச்சராக மாற விரும்பினால் என்னென்னன செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்கு சிறப்பாக கற்றுத்தருகிறார். கடைப்பிடிக்கச் சொல்கிறார். நாம் வாழ்க்கையின் முதலமைச்சராக மாற மூன்று முக்கியமான பண்புகள் நமக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.
1. தெரிந்தவர்களை ஆச்சரியப்படுத்துவோம்
பிசிராந்தையார் பற்றி நமக்கு நன்கு தெரியும். புறநாநூறு பாடலில் வருகின்ற சிறந்த புலவர். சான்றோர் ஒருவர் பிசிராந்தையாரை நோக்கி, ‘உனக்கு ஆண்டுகள் பல ஆகியும் நரையில்லாதிருக்கக் காரணம் என்ன?’ என்று வியப்போடு கேட்டார். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘”ஐயா, பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர்! எமது பாண்டியன் முறை வழுவாது குடிகளைப் பாதுகாக்கின்றான்; எமது ஊரில் அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டு அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டே சான்றோர் பலர் வாழ்கின்றனர். இந்நான்கு காரணங்களால் யான் நரை இன்றி இருக்கின்றேன்” என்றார். கேட்டவர் வியந்தார்.
அன்புமிக்கவர்களே பிசிராந்தையாரின் கூற்றிலிருந்து நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது. இங்கு ஒருவர் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகின்றனர். தங்கள் நடையால், நன்னடைத்தாயால் ஆச்சரியப்படுத்துகின்றனர். ஆகவே அருகிலிருப்பவர்களை ஆச்சரியப்படுத்துவது அவசியமானது. நாம் அருகிலிருப்பவர்களை நம் செயல்பட்டால் ஆச்சரியப்படுத்தி அசத்த வேண்டும். அதுவே நாம் வாழ்க்கையின் முதலமைச்சர்கள் என்பதை வெளிக்காட்டும்.
2. தெரியதாவர்களை ஆச்சரியப்படுத்துவோம்
நாம் வறுமையில் துவண்டாலும் மற்றவர்களின் பொருட்களை நாம் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்கு குஜராத்தை சேர்ந்த வாட்ச்மேன் ஒருவரின் 15 வயது மகன் சிறந்த சான்றாகியிருக்கிறான். விளையாடும்போது தற்செயலாக கிடைத்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரத்தை உரியவரிடம் ஒப்படைத்திருக்கிறான் அச்சிறுவன். அச்சிறுவனின் உயர்ந்த எண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஷால் உபத்யாய். இவனது தந்தை வாட்ச்மேனாக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் 8,000 ரூபாய் சம்பளம். அவனது தாய் துணிகள் தைக்கும் வேலை செய்கிறார். விஷால் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 15-ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று அச்சிறுவன் டைமண்ட் சாலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பந்து ஒன்றை தேடுவதற்காக பார்க்கிங் பகுதிக்கு சென்றான். அங்கே உள்ள இருசக்கர வாகனத்தின் கீழ் ஒரு பை கிடைத்தது. அதில் முழுக்க வைரங்கள் இருந்தன.
“நான் அந்த வைரத்தின் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அன்றிலிருந்து மூன்றாம் நாள் ஒருவர் எங்கள் வீட்டருகே வந்து வைரத்தை தேடி விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரை பின்தொடர்ந்து அவரிடம் என்னிடம் தான் வைரம் இருக்கிறது என்று கூறினேன்.”, என சிறுவன் விஷால் கூறினான்.
அதிலிருந்த வைரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 40 லட்ச ரூபாய். வைரத்தின் உரிமையாளரான மன்சுக் சவாலியா அச்சிறுவனுக்கு 30,000 ரூபாய் பணம் கொடுத்து அவனது நற்பன்பை பாராட்டினார். மேலும்ம் சூரத் வைர வியாபாரிகள் சங்கம் அச்சிறுவனுக்கு 11,000 பணத்தொகையை பரிசாக அளித்தது.
“நான் அச்சிறுவனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு அந்த வைரங்கள் கிடைக்காமல் இருந்தால் எனக்கு அது மிகப்பெரும் இழப்பு. இதனால், ஏற்படும் இழப்பை ஈடு செய்ய என் வீட்டையே விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். என்னையும், என் குடும்பத்தையும் அந்த சிறுவன் காப்பாற்றிவிட்டான்.”, என மன்சும் சவாலியா கூறினார்.
தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவு செய்ய சிறுவன் விஷால் திட்டமிட்டுள்ளான். இது அவனின் அளந்துபோடாத அன்பிற்கு ஆணித்தரமான உதாராணம். அன்புமிக்கவர்களே! விஷால்தான் தலைசிறந்த முதலமைச்சர், வாழ்க்கையின் தலைசிறந்த முதலமைச்சர். தன்னுடைய உயந்த குணத்தால், சிறந்த பண்பால் உயர்ந்து நிறக்கிறார் அவர். நாமும் தெரிந்தவர்களை தாண்டி தெரியாதவர்களையும் அருமையான குணநலன்களால் ஆச்சரியமாக்குவோம்.
3. பகைவர்களை ஆச்சரியப்படுத்துவோம்
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் யார் தெரியுமா? அவர்தான் காமராஜர். காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் வாழ்க்கையில் முழுதிருப்தியும், நிறைவையும் அடைவார்கள்” என்பதுதான்.
அன்புமிக்கவர்களே! பகைவர்கள் என்ற வட்டாரத்தை நாம் உருவாக்க வேண்டாம். அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் நம் செயல்பாடு அவர்களை மன்னிப்பதில் அவர்களோடு உறவாடுவதில் அவர்களோடு இருப்பதில் இருக்கட்டும். நம் புன்னகையை, முகமலர்ச்சியைக் கொடுப்பதே அவர்களுக்கான தண்டனையாக இருக்கட்டும்.
மனதில் கேட்க…
1. நாட்டின் முதலமைச்சராக மாறுவது அல்ல என் இலக்கு வாழ்க்கையின் முதலமைச்சர் ஆவதுதானே?
2. அனைவரையும் வியப்புக்குரிய விதத்தில் ஆச்சரியப்படுத்தலாமே? இது நல்லாயிருக்கும் அல்லவா?
மனதில் பதிக்க…
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் (மாற் 9:35)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா