வாழ்க்கைக்கான ஞானம்
சீராக் 48: 1 – 15
சீராக்கின் புத்தகத்தில்காணப்படும் இந்த பாடல், ஒருவரை நினைத்து அவர் வாழ்ந்தபோது நடந்த மிகச்சிறந்த செயல்பாடுகளை நினைத்து புகழ்ச்சிமாலையாக பாடப்படும் பாடலாகக்காணப்படுகிறது. இது ஒரு புகழ்ச்சிப்பாடல். யாரை நினைத்து இந்த பாடல் பாடப்படுகிறது? இறைவாக்கினர் எலியா. கி.மு.869 ம் ஆண்டு, ஆகாபு அரசனுக்கு எதிராக அவர் இறைவாக்குரைத்தார். வடக்கு மகாணத்தின் மிகச்சிறந்த இறைவாக்கினராக அவர் பார்க்கப்படுகிறார். பாகால் தெய்வத்திற்கு எதிரான வழிபாட்டுமுறைகளை அழித்தொழித்தார். இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அதனை நேரில் கண்டவராக இறைவாக்கினர் எலிசா சுட்டிக்காட்டப்படுகிறார். இறைவாக்கினர் எலியாவின் மிகச்சிறந்த செயல்பாடுகள் இந்த வாசகத்தில் இடம்பெறுகிறது.
இறைவாக்கினா் எலியாவின் புகழ்ச்சிபாடல் எதற்கக சீராக்கின் புத்தகத்தில் இடம்பெறுகிறது? சீராக்கின் புத்தகம் பல அறிவுரைகளை வாழ்க்கைக்குத் தருகிற புத்தகமாக அமைகிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்? நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? வாழ்க்கையில் நமக்கு இருக்கிற பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நினைவூட்டுவதாக இந்த புத்தகம் அமைகிறது. அதேவேளையில், கடவுள் முன்னிலையில் புனிதமாக வாழ்ந்தவர்களைப் பற்றிய சிந்தனைகளை நமக்குத்தந்து, நாமும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்கிற அறிவுரையை நமக்குத் தருகிறது. அவர்களைப் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறபோது, நிச்சயம் நாமும் இறைவன் முன்னிலையில் ஆசீர்பெற்றவர்களாக வாழ முடியும் என்பதுதான் இங்கு நாம் பெறுகிற செய்தியாக இருக்கிறது.
நம்மை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், நம்முடைய பெற்றோர்கள், நம்முடைய நலம்விரும்பிகள் அனைவருடைய அறிவுரைக்கும் செவிமடுத்து நம்முடைய வாழ்க்கையை வாழ முயற்சி எடுப்பது நமக்கு பலன் தரக்கூடியதாகவும், பயன் தரக்கூடியதாகவும் இருக்கும். அவர்களின் அனுபவம் நமக்கான ஞானமாக அமையும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்