வாழு! வாழ வை!
மாற்கு 10:17-27
செல்வர்களுக்கு எதிரான சங்கினை இன்றைய நற்செய்தியில் கேட்க முடிகின்றது. செல்வர்களின் மனநிலையை மிக அழகாக இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். நற்செய்தியாளர் மாற்கு. தன்னிடம் வந்த செல்வந்தரை நிலைவாழ்வினை நோக்கி படிப்படியாகக் கூட்டிச் செல்கின்றார் இயேசு. உண்மையாக நமக்குத்தான் இந்தப் படிகள் ஒரு பாடம். நிலை வாழ்வினைப் பெருவதற்கு முதல் படிநிலை கட்டுப்பாடற்ற, ஏனோதானோமாக, தன் விருப்பபடியெல்லாம் வாழாமல் கட்டளைகளைக் கடைபிடித்து நிலை வாழ்விற்குக் கடந்து செல்ல வேண்டும். இது ஒரு குமுகக் கடமை என்பதோடு நிறைவு பெறுகின்றது. இந்த முதல்படியில் தன்னால் பிறருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதோடு முடிகின்றது.ஆனால் இது நிறைவன்று. நிறைவு என்பது தன்னால் பிறருக்கு என்ன நன்மை என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இதைத்தான் இயேசு அந்த செல்வரிடம் கேட்கிறார். “உன்னால் யாருக்கும் பிரச்சனை இல்லை, நன்று. ஆனால் உன்னால் யாருக்கு என்ன நன்மை?” என்கிறார்.
இந்தக் கேள்வியை நாம் இன்று பலதளத்தில் கேட்க முடியும். நாம் இதனை நம் கிறித்தவ வாழ்வில் கேட்பதே நம் கடமையும் முறையும் ஆகும். இன்று நம்மில் பலபேர் குறிப்பாக பிரிந்து போன கிறித்தவர்கள் அல்லது அவர்களின் வாடையைக் கொண்ட கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கூட, ‘நான் இயேசுவை நம்புகிறேன், தினமும் திருப்பலிக்கு செல்கிறேன், ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன், கோவில் காரியங்களில் என் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுகிறேன்’ என்று பிறருக்கு எந்த துன்பமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்,இவர்களால் பிறருக்கு என்ன பயன்? பிற சபையினர், “நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்” என்பதைமட்டும் பிடித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் இந்த இறை நம்பிக்கை, தன்செயலில் இல்லாவிட்டால் அது தன்னிலே இறந்து விட்டது” (யாக்: 2:26) என்பதை மறந்தும், மறுத்தும் விடுகிறார்கள். கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும். நிலைவாழ்வு என்பது தான் மட்டும் வாழ்வதல்ல பிறரையும் வாழ்விப்பது.
– திருத்தொண்டர் வளன் அரசு