வார்த்தையை நம்பி !
அரச அலுவலர் இயேசுவிடம் வந்து தன் மகனை நலமாக்க வருமாறு அழைத்தபோது, இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப் போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மகன் பிழைத்துக்கொண்டான். எனவே, அவரும் அவர் வீட்டாரும் இயேசுவை நம்பினர்.
இறைவனின் இயல்புகளுள் ஒன்று அவர் “வாக்கு மாறாதவர்” என்பது. எனவேதான், காலையில் அவரது பேரன்பையும், இரவில் அவரது வாக்குப் பிறழாமையையும் புகழ்வது நல்லது என்று திருப்பாடலில் (92) வாசிக்கிறோம். இறைவன் வாக்குப் பிறழாதவர், சொன்ன சொல் தவறாதவர். எனவே, நாமும் அவரது வார்த்தையை நம்பி வாழ்வோம். இறைவனின் வாக்கே விவிலியம். அந்நூலில் இறைவனின் வாக்குறுதிகளும், ஆறுதல் மொழிகளும், அறைகூவல் சொற்களும் அடங்கியுள்ளன. அவரது வார்த்தைகள் நிலைவாழ்வைத் தருகின்றன. எனவே, இறைவனின் வார்த்தையை நம்புவோம். அந்த வார்த்தைகளின்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
மன்றாடுவோம்: வாழ்வு தரும் வார்த்தைகளின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நலம்; தரும், வாழ்வு தரும், உயிர் தரும் உம் வார்த்தைகளை ஆர்வத்துடன் வாசிக்கவும், வாசித்த வார்த்தைகளை நம்பி வாழவும் எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா