வார்த்தைகள் – ஆன்மீக முதிர்ச்சியின் வெளிப்பாடு
யூதர்களுக்கு தங்களின் இனம் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, அவர்கள் யூதர் அல்லாத புற இனத்து மக்களோடு திருமணஉறவு கொள்வதைத்தவிர்த்து வந்தனர். புற இன நாடுகளுக்குச்சென்று வந்தால், தங்கள் நாட்டிற்குள் நுழைகின்றபோது, காலில் படிந்திருக்கும் தூசியைத்தட்டிவிட்டுத்தான் தங்கள் நாட்டிற்குள் காலடி எடுத்து வைப்பர். புறவினத்தாரோடு உறவு ஏற்படுத்தினால் தாங்களும் தூய்மையற்றவர்களாகி விடுவோம் என்கிற எண்ணம் யூத மக்களிடையே இருந்தது. அவர்களுக்கு இறைரசில் இடமில்லை என்ற நினைப்பும் அவர்களிடையே மேலோங்கியிருந்தது.
தூய்மைச்சடங்கு பற்றி விமர்சனம் செய்து, மறைநூல் அறிஞர்களின் வெறுப்பைச்சம்பாதித்த இயேசு, மற்றுமொரு விமர்சனத்தை இந்த நற்செய்தியிலே முன்வைக்கிறார். ஏறக்குறைய இப்போதைய தீண்டாமை ஒழிப்புதான், இயேசுவின் விமர்சனம். கிரேக்கப்பெண் இயேசுவிடம் வந்து, மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு வேண்டியபோது, இயேசு சொல்கிற வார்த்தை நமக்கு அதிர்ச்சியானதாக இருக்கிறது. காரணம் அவர் கிரேக்கப்பெண்ணை நாயோடு ஒப்பிடுகிறார். நாய் என்பது யூதர்களால் மட்டுமல்ல, கிரேக்கர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட விலங்கு. அப்படிப்பட்ட விலங்கோடு, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட பெண்ணை எப்படி இயேசு ஒப்பிடலாம்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழுவது இயல்பு. வார்த்தை மோசமான வார்த்தைதான் என்றாலும், அது பயன்படுத்தப்படுகிற முறை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. கழுதை என்று யாரையாவது கூப்பிட்டால் அது மோசமான வார்த்தைதான், ஆனால், அதே கழுதை என்ற வார்த்தையை நம்மில் பலபேர் செல்லமாகக்கூப்பிடவும் பயன்படுத்துவோம். எந்தத்தொனியில், எப்படிப்பட்டச்சூழ்நிலையில் சொல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம். நிச்சயமாக, பரந்த மனப்பான்மை கொண்ட இயேசு, இதை மோசமான பொருளில் சொல்லியிருக்க முடியாது, அப்படி சொல்லியிருந்தால், அந்தப்பெண்ணே கோபத்தை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால், அந்தப்பெண்ணோ வரும்போது இருந்த கரிசனையோடு தான் இயேசுவுக்கு பதிலளிக்கிறாள்.
நாம் பயன்படுத்துகிற வார்த்தைகள் மீது நாம் அதிக கவனம் வைத்திருக்க வேண்டும். எனவேதான் பெரியவர்கள் சொன்னார்கள்: ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும். நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்துகின்ற வார்த்தைகளாகவோ, இழிவுக்குரிய வார்த்தைகளாகவோ இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளாக, மகிழ்ச்சி தரக்கூடிய வார்த்தைகளாக இருக்க முயற்சி எடுப்போம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்