வார்த்தைகளின் வழியில் இறைவனோடு பேசுவோம்
ஓசேயா 14: 1 – 9
“மொழிகளை ஏந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்”என்று, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதாவது, கடவுளிடத்தில் வருகிறபோது, நம்முடைய வார்த்தைகளை ஏந்தி வந்து சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள். கடவுளிடத்தில் வருகிறபோது, நாம் வார்த்தைகளை ஏந்தி வருவது அவசியமானது. நம்முடைய உணர்வுகளோடு கடவுளிடத்தில் பேசுவது தவறல்ல. நாம் இறைவன் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். உள்ளத்தளவில் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். இந்த உணர்வுகளோடு பேசுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் கடந்து நாம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும். உணர்வுகளைக் கடந்து நாம் கடவுளிடத்தில் எப்படி செல்வது? வார்த்தைகள் வழியாக நாம் கடவுளிடத்தில் செல்ல வேண்டும்?
கடவுள் நம்முடைய உள்ளத்து உணர்வுகளை, நாம் அறிவார்ந்து சிந்திக்கிற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அருமையான வார்த்தைகளைத் தந்திருக்கிறார். கடவுள் முன்னால் அமர்ந்து, அவருடைய அன்பை நாம் அனுபவிக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நான் கடவுளை அன்பு செய்வது உண்மை என்றால், “இறைவா! நான் உன்னை அன்பு செய்கிறேன்”என்று, வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்த வேண்டும். இறைவன் முன்னிலையில் நான் பாவம் செய்துவிட்டேன். நான் ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றால், வெறுமனே உணர்வுகளை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. “இறைவா! நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியும்!” என்று, இறைவனுடைய மன்னிப்பை நாம் வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்தி, கேட்க வேண்டும்.
இறைவனோடு நம்முடைய நேரத்தை செலவிடுவது என்பது, நம்முடைய முதன்மையான தேவையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் வெறுமனே அமைதியிலும், உணர்வுளின் வழியாக வெளிப்படுத்துவதில் மட்டும் அல்லாமல், அதனையும் கடந்து, இறைவனை வார்த்தைகளில் வெளிப்படுத்த, முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களை, சிந்தனைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இறைவனின் அருள் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்