வாய் திறந்தது, வாழ்த்தியது
லூக்கா 1:67-79
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஆண்டவரின் தூதர் சொன்னப்படியே திருமுழுக்கு யோவான் பிறந்ததும் பேச்சிழந்த செக்கரியா சத்தமாக பேசுகிறார். பேச முடியாமல் இருந்த நிலையில் அவர் பலவற்றை பேச முடியவில்லை. ஆகவே அனைத்தையும் சேர்த்து மொத்தமாக இப்போது பேசுகிறார், பாடுகிறார். வாழ்த்துகிறார். அவருடைய வாழ்த்திலிருந்து நாம் இரண்டு செய்திகளை நம் வாழ்க்கை பாடமாக பெற முடிகிறது.
1. நம்பிக்கைக்குரியவர்
ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர் என்பதை செக்கரியாவின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே அவநம்பிக்கை இல்லாமல் கடவுளின் வரத்திற்காக காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் செக்கரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவநம்பிக்கை கொள்ளும்போது நாம் கடவுளை பரிசோதிக்கிறோம். அது மிகவும் தவறானது என்பது நமக்கு தெரிகிறது. அவர் என்றும் நம்பிக்கைக்குரிய எல்லாம் வல்ல ஆற்றல் நிறைந்த ஆண்டவர்.
2. நன்மைக்குரியவர்
ஆண்டவர் நன்மை தவிர வேறு எதையும் தம் பிள்ளைகளுக்கு செய்வதில்லை. பரிவுமிக்க கடவுள். பாசத்தை தாறுமாறாக பொழிகின்றார். அவரிடமிந்து அன்பு அணைகடந்து வருகிறது. தம் சிறகுகளின் கீழ் சிறப்பிடம் கொடுத்து அவர் நம்மை அரவணைக்கின்றார். நன்மைகளை நமக்கு செய்வதில் அவர் சோர்வடைவதில்லை.
மனதில் கேட்க…
1. வாயைத் திறந்து நான் ஆண்டவரை வாயார வாழ்த்துகிறேனா?
2. அவநம்பிக்கை என் வாழ்வில் இனி ஏற்படுமா?
மனதில் பதிக்க…
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார் (லூக் 1:68)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா