வானதூதரே! வாழ்த்த வருவாரே…
லூக்கா 1:26-38
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்னை மரியாள் வாழ்க்கை பரிசுத்தமானது. அவர் வாழ்ந்த குடும்பத்தில் மிகச் சிறந்த பயிற்சி பெற்றார். ஆகவே உலகில் உள்ள இருளின் வசம் தன் வாழ்வை ஒப்படைக்காமல் ஒளியின் மகளாக பிரகாசித்து வந்தார். சுடர்ஒளியாய் வாழ்ந்து வந்தார். அவர் தன் மிகச் சிறப்பான வாழ்வால் வானதூதரை மண்ணகம் இறங்க வைத்தார். வானதூதரே அவருடைய வாழ்வால் அவரை இம்மானுவேலின் தாயாக மாறும் பாக்கியத்திற்காக தோ்ந்தெடுத்தார். இவையனைத்தும் கடவுளின் திட்டமே!. இது கிடைத்தது மரியாள் செய்த பாக்கியமே! நாமும் வானதூதரை சந்திக்க இரு செயல்களை செய்தால் போதும்.
1. அமைதி
மிகவும் அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். அதிகமாக குதிக்க கூடாது. பெருமை கிட்டினாலும் புகழ் வந்தாலும் அமைதியாக அதை அணுக வேண்டும். எதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், பேராசை கொள்ளாமல் வாழ வேண்டும். அன்னை மரியாள் மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்தார். அவர் அமைதியான ஒரு ஆன்மா. ஆனால் அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்து சிறப்பான வாழ்வு வாழ அமைதியை மிகவும் கருத்தாய் கடைப்பிடித்தார். ஆகவே தான் வானதூதரே ஓடி வந்து வாழ்த்து தெரிவித்தார்.
2. ஆனந்தம்
அன்னை மரியாள் முகத்தில் ஆனந்தம் பளிச்சென்று இருந்தது. அமைதியாக இருந்து ஆனந்தத்தை சம்பாதித்தார். முழுவதும் அருள், ஆனந்தம் வழிந்தோடியது. அந்த முகத்தை பார்க்கும் அனைவருக்கும் ஆனந்தம் ஓடி வரும் அளவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவள் அன்னை மரியாள். ஆகவே தான் வானதூதரே ஓடி வந்து வாழ்த்து தெரிவித்தார்.
மனதில் கேட்க…
1. என்னை வாழ்த்த வானதூதர் வருவாரா? எப்போது?
2. வானதூதர் என்னை சந்திக்க வர நான் எடுக்கப்போகும் முயற்சிகள் என்னென்ன?
மனதில் பதிக்க…
வானதூதர் மரியாவுக்கு தோன்றி, ”அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். (லூக் 1:44)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா