வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன
திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4, (1அ)
கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது நம்முடைய நம்பிக்கை. இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் பார்க்கிறபோது, பலவிதமான அறிவியல் வாதங்கள் நம் முன்னால் வைக்கப்படுகிறது. ஒரு செல் உயிரிலிருந்து மனித இனம் உருவானது என்று சொல்லப்படுகிறது. பரிணாம வளர்ச்சி தான் அடிப்படை என்கிற கருத்து வைக்கப்படுகிறது. கோள்கள் வெடித்துச் சிதறியதில் தற்செயலாக உயிரினங்கள் தோன்றின என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இப்படி இந்த உலகம் தோன்றியதற்கு பலவிதமான வாதங்களை அறிவியல் உலகம் நம் முன்னால் வைக்கிறது. ஆனால், விசுவாசிகளுக்கு, கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை.
விவிலியத்தின் தொடக்கநூலில் நாம் பார்க்கிறோம், கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். தொடக்கநூலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதையும் நாம் அறியாதவர்கள் அல்ல. விவிலியத்தை அறிவியல்பூர்வமாக ஆராய முற்படுகிறபோது, முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், விவிலியத்தை எழுதிய இறை ஏவலால் தூண்டப்பட்டவர்களின் நோக்கம், நமக்கு அறிவியலைத் தர வேண்டும் என்பதல்ல. மாறாக, உண்மையைத் தர வேண்டும். தாங்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தைத் தர வேண்டும். நாம் அனைவரும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே, அது மீட்பின் வரலாறாக படிக்கிறபோது, நமக்கு உண்மையைப் போதிக்கிறது, நமக்கு மீட்பைத் தருகிறது. உதாரணமாக, தொடக்க நூலில் படைப்புக்களைப் பற்றி முரண்பாடான செய்திகள் இருந்தாலும், ஆசிரியர் சொல்ல வருகிற கருத்து, கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதாகும். கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதில் அவருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சொல்கிற பாணியில் தவறு இருக்கலாம். இந்த திருப்பாடலும், இயற்கையின் வழியாக நாம் அவர்களைப் படைத்தது கடவுள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்கிற உண்மையை வலியுறுத்திக் கூறுகிறது. கடவுளை மகிமைப்படுத்த அழைப்புவிடுக்கிறது.
நம்முடைய வாழ்வில் எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பார்க்க முடியாது. அறிவியல்பூர்வமாக விளக்கம் தர முடியாது. ஒரு சில நிகழ்வுகளை விசுவாசக் கண்ணோடு பார்க்கிறபோது மட்டும் தான், அதற்கான விடையைப் பெற்றுக்கொள்ள முடியும். கடவுளை விசுவாசத்தோடு அணுகுவோம். இறையனுபவத்தைப் பெற்றுக் கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்