வாக்குறுதி மாறாத கடவுள்
கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது.
ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தலைவரின் சொல்லில் வைத்திருக்கிற நம்பிக்கை வீண்போகவில்லை. இங்கே தலைவர் இரக்கம் காட்டுகிறவராக, புரிந்து கொள்கிறவராக, அரவணைக்கிறவராக, எதிர்ப்புகளுக்கு நடுவில், தன்னுடைய வாக்குறுதியை நிலைநிறுத்துகிறார். தலைவரை கடவுளுக்கு ஒப்பிட்டு நாம் புரிந்து கொள்ளலாம்.
நாம் தந்தையாகிய கடவுள் நம்மிம் எதிர்பார்க்கிறவற்றை நிறைவாகச்செய்கிறபோது, நிச்சயம் கடவுள் நமக்கு அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். நமது தேவை அறிந்து அவர் செய்வார். நம்மை நேரிய வழியில் வழிநடத்தி, நிறைவாழ்வைப் பரிசாகத்தருவார். அந்த நம்பிக்கையை நமது வாழ்வில் நாம் பெற்றுக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்