வாக்குறுதிகள்
விடுதலைப்பயணம் 24: 3 – 8
இஸ்ரயேல் மக்களோடு கடவுள் மோசே வழியாக பேசுகிறார். தன்னுடைய வார்த்தைகளை மோசேக்கு அறிவித்து, அவர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும், ஒரே குரலாக, ”ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று பதில்மொழி தருகின்றனர். இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருந்த பக்தி, நம்பிக்கை இந்த பகுதியில் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அதை சொல்லவில்லை. மாறாக, பலிபீடங்களை எழுப்பி, அதில் கடவுளுக்கு பலி செலுத்தி, தங்களது வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர்.
பலி செலுத்துவது என்பது வாக்குறுதியின் அடையாளமாக இருக்கிறது. பொதுவாக, பலியிடுதலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. அப்படி பலியிடப்படுகிறபோது, வாக்குறுதி கொடுக்கிறவர்கள் அந்த பலிபீடத்தைச் சுற்றி வருகிறார்கள். எதற்காக? அதனுடைய பொருள் இதுதான்: நாம் இருவரும் இங்கே வாக்குறுதி கொடுக்கிறோம். ஒருவேளை, யாராவது வாக்குறுதியை மீறினால், இந்த விலங்குகள் பலியிடப்படுகிறபோது வெட்டப்படுவதுபோல, வெட்டப்படுவார்கள் என்பதைக் குறித்துக்காட்டத்தான். இங்கு, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுகிற உடன்படிக்கையின் அடையாளமாக பலி செலுத்தப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு உண்மையாக இருப்பதற்கு, கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருப்பதற்கு வாக்குறுதி கொடுக்கிறார்கள்.
இறைவன் திருமுன் இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவோ வாக்குறுதி கொடுக்கிறார்கள். இறைவன் பெயராலும், இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் பெயராலும் அவர்கள் வாக்குறுதி கொடுத்தாலும், அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதாகத்தான் இருக்கிறது. கொடுக்கிற வாக்குறுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் உண்மையாய் இருக்க வேண்டுமென்று செபிப்போம்.