வழியைச் செம்மைப்படுத்துங்கள்
திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15
செம்மைப்படுத்துதல் என்றால் என்ன? பண்படுத்துவது, தூய்மைப்படுத்துவது, நடப்பதற்கு ஏதுவாக தயார் செய்வது என்று பலவிதமான அர்த்தங்களில் நாம் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளலாம். திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்: ”தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் ஆண்டவர் தரும் மீட்பைக் கண்டனர்”. மனித வாழ்க்கை நீண்டதொரு பயணம். இந்த பயணத்தில் நாம் செல்லும் பாதை முக்கியமானது. நம்முடைய பயணத்தில் பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியாக பயணிக்க வேண்டும். நம்முடைய வழிகளில் தடைகள் வரலாம், சோதனைகள் வரலாம், ஆனால், அவற்றைக் கடந்து நாம் செல்ல வேண்டும். அதைத்தான் இங்கே நாம் பார்க்கிறோம்.
வாழ்வில் எதை நோக்கி நம்முடைய பயணம் அமைகிறது? என்பது முக்கியமானது. கடவுள் தரும் மீட்பையும், நிறைவையும் நாம் அடைய வேண்டுமென்றால், குறிப்பிட்ட பாதையைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் விருப்பப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், “இப்படித்தான் வாழ வேண்டும்“ என்கிற வரையறைக்குள்ளாக வாழ வேண்டும். அந்த வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானது அல்ல. அது சவால்களும், சங்கடங்களும் நிறைந்தது. ஆனால், நிச்சயம் அது நமக்கு கடவுள் தரும் மீட்பை வழங்கும். அந்த மீட்பை அனுபவித்து உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர், தான் பெற்ற அனுபவத்தை, மற்றவர்களும் பெற வேண்டும் என்பதற்காக, இதனை பாடலாக வடிக்கிறார்.
நம்முடைய வாழ்வில் கடவுளை நோக்கிய நம்முடைய பயணத்தில் நாம் எதனை நோக்கிப் பயணிக்கிறோம்? சவால்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா? கடவுள் நமக்கு வாக்களித்திருக்கிற மீட்பின் விருந்தில் பங்கு கொள்வதற்கு தயாராக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்