வழிகாட்டலும், வழிநடத்தலும்
பாவச்சோதனை வருவதை தடுக்க முடியாது என்று இயேசு சொல்கிறார். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகைப்படைத்தபோது அனைத்தும் நன்றாக இருந்தது எனக்கண்டார். ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன” (தொடக்கநூல் 1: 31). ஆனால், அலகை பாம்பின் வடிவில் முதல் பெற்றோரை தனது நயவஞ்சகப்பேச்சினால் மயக்கி, இந்த உலகத்தில் பாவத்தை நுழைத்தது. அதுவரை நன்றாக இருந்த இந்த உலகம், முதல் மனிதனின் கீழ்ப்படியாமையால் பாவத்திற்கு இரையானது.
இந்த உலகத்தில் சோதனை, தீமை இருப்பதை தவிர்க்க முடியாது. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, நாமே தீமையாக மாறிவிட முடியாது. நாமும் பாவத்திற்கு பலியாகி, மற்றவர்களையும் பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய தண்டனைக்குள்ளாக்கக்கூடிய பாவம். மற்றவர்களை இடறிவிழச்செய்வதும், மற்றவர்கள் இடறி விழ காரணமாவதும் மிகப்பெரிய குற்றம். . இந்தப்போதனை மக்களை வழிநடத்துகிற தலைவர்களுக்கு மிக மிகப்பொருந்தும். வழிநடத்துகின்ற பணி என்பது எளிதான பணி அல்ல. ஒவ்வொரு முடிவு எடுக்கின்றபோதும், தேர்ந்து தெளிந்திருக்க வேண்டும். தீமையென்று தெரிந்தும் ஒன்றைச்செய்வது, மிகப்பெரிய குற்றப்பழியை சுமப்பதற்கு வழிவகுத்துவிடும். எனவே, வழிநடத்துகின்ற தூய ஆவியானவரின் துணையை நம்ப வேண்டும். அவரிடத்திலே நம்மை வழிநடத்த நாம் மன்றாட வேண்டும்.
நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கிற பணியை பொறுப்புணர்வோடு செய்கிறோமா? மக்களை நல்வழியில் நடத்துகின்றோமா? மற்றவர்களுக்கு இடறல் இல்லாத வாழ்வை வாழ்கிறேனா? பொதுநலனோடு நான் எடுக்கும் முடிவுகள் அமைந்திருக்கிறதா? அல்லது சுயநலம் சார்ந்ததாக இருக்கிறதா? சிந்தித்து செயல்படுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்