வருமுன் காத்துவிட்டீர்களா? தூங்கிவிட்டீர்களா?
லூக்கா 12:35-38
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
வருமுன் காப்பது சிறந்தது என்பார்கள். வாழ்க்கை என்னும் தேர்வுக்காக தங்களை தினமும் விழிப்போடு தயார் செய்பவர்கள் ஒருசிலரே. அவர்களால் மட்டுமே வாழ்க்கையை மிக அழகாக கொண்டு போக முடியும். ஆனால் பலர் இந்த தேர்வில் தோல்வியையே சந்திக்கிறார்கள். இப்படி தோல்வியைச் சந்தித்து துவண்டு போயிருக்கிறவர்களை தூக்கி விடவே இன்றைய நாள் நற்செய்தி வாசகம் வருகிறது. இரண்டு செயல்களை செய்ய சொல்கிறது.
1. வெறி
நான் விழிப்பாக இருந்து என்னுடைய பங்களிப்பை என்னைச் சூழ்ந்து இருக்கின்றவர்களுக்கு கொடுப்பேன் என்ற வெறி கண்டிப்பாக நமக்கு வேண்டும். இந்த வெறி நமக்குள்ளே ரிங்டோனாக இருபத்து நான்கு மணிநேரமும் ஒலிக்க வேண்டும். அந்த ஒலி நம்மை உந்தித் தள்ள வேண்டும்
2. குறி
நம்முடைய இலக்கை தேடுவதில் வெறி வந்ததும் அதை சரியாக குறி பார்க்க வேண்டும். குறி தப்பாத குறியாக அமைதல் வேண்டும். எப்போது குறி தப்பாமல் போகிறது? நம் எண்ணம் தெளிவாக இருக்கும் போது, நம் ஏக்கம் எல்லாம் இலக்கை நோக்கி இருக்கும்போது குறி தப்பாமல் பாய்கிறது.
மனதில் கேட்க…
1. இதுவரை விழிப்போடு இருந்து பிரச்சினைகள் வராமல் காத்தது உண்டா?
2. வெறி, குறி இரண்டும் சரியாக பார்த்தது உண்டா? வெற்றி கிட்டியதுண்டா?
மனதில் பதிக்க…
நீங்கள் ஆயத்தமாய் இருங்கள், ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்(லூக் 12:40)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா