வரலாறு படைக்க வா!
மத்தேயு 11:11-15
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருமுழுக்கு யோவானைப் பற்றி சிந்திக்கும் இந்த நல்ல நாளில் அவர் வாழ்வு வரலாறு படைக்க நம்மை அழைக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரைப் பார்த்து, மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்கிறார். இந்தக் கூற்று திருமுழுக்கு யோவானின் சாதனை மிக்க வாழ்வை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவரைப் போன்று நாமும் வாழ, வரலாறு படைக்க முடியுமா? முடியும் முயற்சியிருந்தால். முயற்சி எங்கே? நமக்குள்ளே இருக்கிறது அதை முடுக்கிவிடுவோம் வாருங்கள். இரண்டு முறைகளில் நாம் முடுக்கிவிடலாம்.
1. கனவு
நாம் என்ன செய்யப்போகிறோம்? எப்படி சாதிக்கப்போகிறோம்? என்னென்ன வழிகளில் வரலாறு படைக்கப்போகிறோம் என்ற திட்டவட்டமான தெளிவுகள் இருக்க வேண்டும். அதைக் குறித்து தினமும் கனவு காண வேண்டும். கனவு என்பது பகலில் காண்பது அல்ல. இந்த இலட்சியத்தை அடையும் வரை தூங்கவிடாமல் நம்மை துரத்துவதுதான் இலட்சிய கனவு. இலட்சிய கனவை எப்போதும் கண்டு களத்தில் இறங்க வேண்டும்.
2. நிஜம்
கண்ட இலட்சியக்கனவை நிஜமாக்க வேண்டும். அதற்கு தினமும் ஓட வேண்டும். ஓடிக்கொண்டே இருந்தால் வெற்றியின் தேவதை ஒருநாள் நம் விலாசத்தை தேடி கண்டிப்பாக வருவாள். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான முறையில் நாம் உழைக்க வேண்டும். ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடு நாம் வரலாற்றை அமைக்க வேண்டும். அப்படிதான் திருமுழுக்கு யோவான் செய்தார்.
மனதில் கேட்க…
1. என் வரலாறு பற்றி எழுதினால் எனக்கு மகிழ்ச்சி வருமா? மனவருத்தம் வருமா?
2. வரலாறு படைக்க திருமுழுக்கு யோவான் அழைப்பது எனக்கு கேட்கிறதா?
மனதில் பதிக்க…
மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை (மத் 11:11)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா