யோவானின் பணித் திட்ட அறிக்கை !
செக்கரியாவின் இறைவாக்கு யோவானின் எதிர்காலப் பணியின் திட்ட அறிக்கை போலவே இருக்கிறது. அது செக்கரியாவின் வாக்கு அல்ல. தூய ஆவியால் அவர் ஆட்கொள்ளப்பட்டு, இறைவாக்காக உரைத்தது. எனவே, திருமுழுக்கு யோவானுக்கான இறைவனின் திட்ட அறிக்கை என்றே எடுத்துக்கொள்ளலாம். அவரது பணியும், வாழ்வும் எவ்வாறு அமையும் என்ற ஒரு பட்டியலே நமக்குத் தரப்படுகிறது.
1. அக்குழந்தை உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படும். எனவே, அவர் இறைவாக்கினராக வாழ்வார் என்பது முதலிலேயே தெளிவுபடுத்தப்படுகின்றது.
2. ஆண்டவருக்கான வழியை செம்மைப்படுத்த, அவர் முன்னே செல்ல வேண்டும் என்பது இன்னொரு தெளிவு.
3. தூய்மையோடும்
4. நேர்மையோடும்
5. வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யவேண்டும்.
யோவானுக்குச் சொல்லப்பட்ட பணித் திட்ட அறிக்கை நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தரப்பட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம். காரணம், நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் முன்னோடிகளாக, இயேசுவைப் பிறருக்கு அறிவிப்பவர்களாக, அவருக்காக உலகை ஆயத்தம் செய்பவர்களாக வாழ வேண்டும். எனவே, நாமும் துhய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றிப் பணி செய்ய வேண்டும். அதற்கான அருளையும், ஆற்றலையும் ஆண்டவரே நமக்கு அருள வேண்டும்.
மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். நானும் திருமுழுக்கு யோவானைப் போல உமது முன்னோடியாக, ஆயத்தம் செய்பவராக வாழ விரும்புகிறேன். என்னை ஆசீர்வதியும். உமது துhய ஆவியால் என்னை நிரப்பும். நான் துhய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றிப் பணிபுரிய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருள்தந்தை குமார்ராஜா