யார் விசேஷித்தவர்கள் ?
இன்றைய சிந்தனை
நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கேன்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கேன்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் வாழ்வோர் மீதும் இறந்தோர் மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். உரோமையர் 14 : 7.
அன்றியும் நம்மை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? நமக்கு உள்ளதை நாம் பெற்றுக்கொள்ளாதது எது? ஒருவேளை அதைபெற்றுக்கொண்டால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மைvபாராட்டவேண்டும்? எல்லோர் மீதும் ஆட்சி செலுத்தும் இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி நம்மையெல்லாம் அவருடைய பிள்ளைகளாக விஷேசித்து வைத்திருக்கிறார். இந்த உலகில் அவரை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் யாவரும் விசேஷித்தவர்களே! அப்படியிருக்க நம்முடைய சகோதரர், சகோதரிகளிடம் நாம் குற்றம் சொல்லாமல் அவர்களை இழிவாக நினைக்காமல் நாம் அனைவருமே கடவுளின் முன்னிலையில் சரிசமமாக நிறுத்தப்படுவதால் ஒருவரை ஒருவர் உயர்வாக எண்ணுவோம். அப்பொழுது நாம் ஆண்டவரின் பார்வையில் விஷேஷித்தவர்களாக இருப்போம்.
“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கு அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை பார்க்காமல் சகோதரர்,சகோதரிகளின் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதேன்? மத்தேயு 7 : 1 to 4 ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஆகையால் பிறர் உங்களுக்கு செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. மத்தேயு 7 : 12.ஆகவே நாம் யாவரும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து கீழ்படிந்து நடந்தோமானால் அவருடைய பார்வையில் நிச்சயம் விஷேஷித்தவர் நாம்தானே!!
அன்னை மரியாள் எப்படி விஷேஷித்தவர்களாக ஆனார்கள்? நாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கே புரியும். அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அவர்களுடைய ஒழுக்கமும் தெய்வ நம்பிக்கையும், அதற்கு மேலாக அவர்களின் தாழ்மையும், தியாக அன்பும், கிழ்படிதலுமே ஆகும். நான்தான் கடவுளின் தாய் என்று அவர்கள் ஒருபோதும் பெருமை பாராட்டவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர்கள் இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்ய செல்கிறார்கள். எவ்வளவு இரக்கம் குணம் . நாம் அந்த மாதிரி நடக்கிறோமா? நாம் ஒவ்வொருவரும் நம் மனதை கேட்டுப்பார்ப்போம். ஏனெனில் நம்முடைய மனச்சான்றே இதற்கு சாட்சி. குற்றம் உண்டு, குற்றம் இல்லை என்று நம்முடைய எண்ணங்கள் நமக்கு தெரிவிக்கும்.
ஆகையால் இனி வரும் காலங்களில் ஒவ்வொருவரும் நம்முடைய ஆண்டவருக்கு விசேஷித்த வாழ்க்கை வாழும்படிக்கு நம்மை அவர் பாதத்தில் சமர்ப்பிப்போம்..ஆண்டவரின் இதயத்துக்கு ஏற்ற
வர்களாக மாறுவோம். அவருக்கு பிரியமானவர்களாக இருப்போம். தியாகத்துடன் அன்பு செலுத்துவோம். சுயநலமில்லாத அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி, ஒருவருக்காக வேண்டுதல் செய்து நாம் எல்லோரும் ஒரே கடவுளுடைய பிள்ளைகள் என்ற பெருமையை இவ்வுலகிற்கு நிலைநிறுத்துவோம். அப்பொழுது ஆண்டவர் சந்தோஷத்தினால் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதித்து அவர் அருகே நம்மைச் சேர்த்து ஒரு தீங்கும் பொல்லாப்பும் நம்மை தொடாதபடிக்கு மறைத்து காத்திடுவார்.
அன்புள்ள இறைவா!!
உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், வாழ்த்துகிறோம். தகப்பனே நாங்கள் குறைவுள்ளவர்கள் என்று நீர் அறிந்து வைத்து இருக்கிறீர். நாங்கள் யாவரும் மண் என்று நினைவு கூர்ந்து எங்களுக்கு
இரங்கும். உமக்கு பயந்து கீழ்படிந்து மனத் தாழ்மையோடு நடந்து கொள்ள உதவிச் செய்யும். உம்மைப்போல் மாற்றும். நீர் விரும்பும் வாழ்க்கையை மாத்திரம் வாழும்படிக்கு ஒரு சிறு குழந்தைக்கு கற்றுத் தருவதுபோல் கற்றுத்தாரும். இதோ, உமது பார்வையில் நாங்கள் யாவரும் உமது சிறுக்குழந்தைதானே. உமது அன்பின் வழியில் நடந்து உமக்கு விசேஷித்தவர்களாக வாழ எங்களை அர்ப்பணிக்கிறோம். பொறுப்பெடுத்துக்கொள்ளும், ஆசீர்வதியும், கண்மணியைப் போல் காத்திடும். துதி,கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே!
ஆமென்! அல்லேலூயா!!