மேன்மையை வழங்கும் இறைவன்
மீக்கா 5: 2 – 5
இறைவன் எப்போதும் உயர்வானதையோ, மேன்மையானதையோ தேடுவபவரல்ல. மாறாக, தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்நிலைக்கு உயர்த்துகிறவர். அவர்களுக்கு மேன்மையை வழங்கி அழகுபார்க்கிறவர் என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்த மீட்புச்செய்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களின் எண்ணமெல்லாம், கண்டிப்பாக, அவர்களை வழிநடத்துகிற இறைவன், உயர்ந்த குடியிலிருந்து பிறப்பார், சிறப்பான நகரத்தில் தோன்றுவார் என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால், கடவுளின் பார்வை வேறு. கடவுளின் அளவுகோல் வேறு.
இறைவன் ஒடுக்கப்பட்டோரின் கடவுள். தாழ்நிலையில் இருக்கிறவர்களை உயர்த்துகிற கடவுள். இறைவன் வாக்குறுதி வழங்கிய மீட்பை நிறைவேற்றுகிறவர், சாதாரண இடத்திலிருந்து பிறப்பார் என்று அறிவிக்கப்படுகிறது. ”ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்”. எத்தனையோ மிகப்பெரிய நகரங்கள், உயர்குலத்தாரின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக, இறைவன் தன்னுடைய ஊழியரை, மீட்பரை, எளிய பிண்ணனியில் தோன்றச் செய்வது, அவர் யாருக்கான கடவுள்? என்பதை, மிக உறுதியாக நமக்கு எடுத்துச் சொல்கிறது.
எளியவர்களாக இருந்தாலும், பொருளாதாரத்தில் தாழ்நிலையில் இருந்தாலும் நாம் வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில், இறைவன் நம் சார்பாக இருக்கின்றார். நமக்கானவராக இருக்கின்றார். எப்போதும் அவர் நமக்கு துணைநிற்கின்றார் என்கிற நம்பிக்கை உணர்வோடு, இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்