மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே
திருப்பாடல் 110: 1, 2, 3, 4
எபிரேயர் 6: 20 சொல்கிறது: ”மெல்கிசெதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக்குரு என்னும் நிலையில் நம் சார்பாக இயேசு அங்கு சென்றிருக்கிறார்”. யார் இந்த மெல்கிசெதேக்? பழைய ஏற்பாட்டு புத்தகத்தின் தொடக்கநூலில் 14 ம் அதிகாரத்தில் ஒரு நிகழ்வு நமக்குச் சொல்லப்படுகிறது. ஆபிராமின் சகோதரர் லோத்தை எதிரிகள் பிடித்துச் சென்றதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன்னுடைய ஆட்களோடு சென்று, அவர்களை தோற்கடித்து, லோத்தை மீட்டார். அந்த நேரத்தில் மெல்கிசேதேக்கைச் சந்திக்கிறார். தொடக்கநூல் 14: 18 – 20 ”சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ”உன்னத கடவுளின்” அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, ”விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!“ என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
இங்கு அவர் சாலேம் நாட்டின் அரசர் என்று குறிப்பிடப்படுகிறார். சாலேம் என்றால் அமைதி என்று எபிரேயத்தில் பொருள் உண்டு. அவர் அமைதியின் அரசர். நீதியின் அரசர். கடவுளுக்கு அஞ்சி நடக்கும் அரசர் என்றும் சொல்லப்படுகிறார். எபிரேயர் 7: 2 ல், இது மேற்கோளாகக் கொடுக்கப்படுகிறது. எபிரேயர் 5: 6 லும், திருப்பாடல் 110: 4 லும், மெல்கிசெதேக்கின் குருத்துவம் என்று சொல்லப்படுகிறது. கடவுள் வாக்களித்த மீட்பரைப்பற்றி தாவீது அரசர் இங்கே பாடுகிறார். அவர் எப்படி அமைதியின் அரசராக இருக்கப் போகிறார் என்பதையும் இங்கே நமக்கு விளக்கமாக எடுத்துச்சொல்கிறார்.
அமைதியின் அரசரைப் பெற்றிருக்கிற நாமும், அமைதியை விரும்புகிறவர்களாக, அமைதியை விதைப்பவர்களாக வாழ வரம் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்