மூவொரு இறைவன் பெருவிழா
கடவுள் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களாய் இருக்கின்றார். ஆயினும் ஒரே கடவுள் என்பதே மூவொரு கடவுள் பற்றிய அடிப்படையான இறையியல். இயேசுகிறிஸ்து மனிதனாகப் பிறந்தார். இவரில் மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்விசுவாசம் வழிபாட்டில் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு திருவழிபாடும் மூவொரு கடவுளின் புகழ்ச்சியோடுதான் தொடங்குகின்றது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டின் முடிவில் ”இவர் வழியாக…” என்கிற மூவொரு கடவுளின் புகழ்ச்சி பாடப்படுகின்றது. திருமுழுக்கும் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு தொடக்கவுரையிலும் இந்த இறையியல் வெளிப்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டு வரை, இது வழிபாட்டில் திருவிழாவாக ஏற்படுத்தப்படவில்லை. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் புனித பெனடிக்ட் சபையைச் சேர்ந்த துறவற மடங்களில் பெந்தகோஸ்தே நாளுக்குப் பிறகு இந்த திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை திருத்தந்தை 22 ம் ஜான், கி.பி 1334 ல் அறிமுகப்படுத்தினார். திருச்சபை வரலாற்றில் நெருக்கடியான வேளையில் பல்வேறு சவால்களை திருச்சபை சந்தித்த அக்காலக்கட்டத்தில் இறைவன் பராமரித்து பாதுகாத்து வழிநடத்தியதற்கு நன்றியாக இதனை அறிமுகப்படுத்தினார்.
மூவொரு இறைவன் திருவிழா நம் விசுவாசத்தின் அடிப்படையாக அமைந்த ஒரு விழா. இந்த விசுவாசத்தை நமது பிள்ளைகளுக்கு எளிய மொழியில், அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் கற்றுக்கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அந்த கிறிஸ்தவ விசுவாசத்தில் நாமும் வளர்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்