மூன்று அறிவுரைகள் !
இன்றைய நற்செய்தி வாசகம் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15) வழியாக மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் இயேசு. 1. நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம்… இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம். 2. நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார். 3.ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. நாம் இரு கடவுள்களை வழிபட முடியாது. கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப் பற்று சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.
மன்றாடுவோம்: செல்வத்தில் எல்லாம் பெருஞ்செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நீர் எங்களுக்குத் தருகின்ற இந்த மூன்று அறிவுரைகளையும் நாங்கள் ஏற்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா