மூதாதையரை நினையுங்கள் இன்று…
மத்தேயு 1:1-17
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும்.
1. அவர்களைப் போல்…
அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும் இருந்தன.
2. அவர்களை விட…
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சிறப்பான வாழ்க்கையால் இந்த பட்டியலில் வருபவர்களை விட மிக சிறப்பாக வாழ்ந்தவர். சரித்திர படைத்த சர்வ வல்லவர். மனிதனும் தெய்வமும் அவரே. நாமும் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று நம் மூதாதையரை விட பல மடங்கு உயர, சாதனைகள் செய்ய இந்த நாளில் அழைப்படுகிறோம்.
மனதில் கேட்க…
1. என் மூதாதையரை அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டா?
2. என் மூதாதையரை விட பல நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்திருக்கிறதா?