முழுமையை நோக்கி…
மத் 5: 17-19
திருவிவிலியத்தை இரண்டாகப் பிரித்தோமென்றால் அது (1) பழைய ஏற்பாடு, (2) புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை இரண்டாகப் பிரித்தோமென்றால், (1) முதல் ஐந்து புத்தகங்களான தோரா, இவை அனைத்தும் திருச்சட்டங்களைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. (2) மற்ற அனைத்தையும் இறைவாக்குகளலாக (பல உட்பிரிவுகள் இருந்தாலும்) எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவையனைத்திலும் ஏதோ ஒன்று குறையிருப்பதாகவும், முழுமையைப் பெறுவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதையுமே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிறைவைக் கொடுப்பவரே இயேசு. அவரது படிப்பினைகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டோடு இணையும் பொழுதே, ஒரு முழுமையும் நிறைவும் பெறுகிறது. இந்த நிலையை அறிந்து கொள்வது வெறும் முதல் படிநிலைதான். (யூதர்களைச் சற்று சிந்திக்கவும் அவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டை மட்டுமே தமது புனித நூலாகக் கொண்டிருக்கிறார்கள்)
அடுத்தநிலை என்னவென்றால் அறிந்தவற்றை அறிக்கையிடுதல், கற்பித்தல். இந்த நிலையில் இருப்பவர்கள் விண்ணகத்தில் சிறியவர்களே. (நம்மில் பலரையும் குறிப்பாக சில பிறசபை கிறித்தவர்களைப் பற்றி சிந்திக்க)
இறுதிநிலை என்னவென்றால் கற்பிப்பவர்கள் அதை முதலில் தான் கடைபிடித்துவிட்டு பின்பு பிறருக்கு கற்பிப்பவர்களே விண்ணகத்தில் பெரியவர்களாக இருப்பர் என்கிறார் இயேசு. இயேசுவைப்பற்றி நன்கு அறிந்தவர்களும், அவரைப்பற்றிப் பிறர்க்கு எடுத்துரைப்பவர்களும் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, அவரின் சொல்லினையும் செயலினையும் நம் வாழ்வாக்க வேண்டும். அவற்றை நம் வாழ்வாக்க சிறந்ததொரு காலமே இத்தவக்காலம். இப்படிப்பட்ட இத்தவக்காலத்தின் நோக்கத்தினை அறிந்தவர்களாக வாழ்ந்து நம்மை முழுமையாக்குவோம்.
~ திருத்தொண்டர் வளன் அரசு