முழந்தாளிடு முன்னேற்றத்தைப் பாரு…
லூக்கா 6:12-19
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஜெபிக்கும் போது நாம் கடவுளோடு உறவாடுகிறோம். நம்முடைய ஜெபம் நமக்கு ஜெயத்தை தர வல்லது. ஜெபத்தில் நாம் கடவுளின் அதிசயத்தை கண்டுணர்கிறோம். ஜெபத்தில் நம்முடைய குறைகளைக் கண்டுபிடித்து நிறைவை நோக்கி பயணம் செய்ய முடிகிறது. முழந்தாளிட்டு ஜெபிக்கும் போது நம் வாழ்வில் முன்னேற்றம் முந்திக்கொண்டு வரும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முக்கிய செய்தி. முழந்தாளிட்டு நன்கு ஜெபிக்கும் போது பல செயல்களை நாம் மிகவும் எளிமையாக செய்ய முடிகிறது. அவற்றுள் இரண்டு இன்று.
1. குறிக்கோளை குறி வைக்கலாம்
ஜெபிக்கும் போது நம் வாழ்விற்கான குறிக்கோள் மிகவும் தெளிவாகிறது. பலருக்கு குறிக்கோள் இருக்கிறது. ஆனால் சில காலங்களிலே அது காணாமல் போகிறது. ஜெபிப்பவர்கள் அந்த எடுத்த குறிக்கோளை குறி வைத்து தாக்குவர். அந்த தாக்குதலில் வெற்றி பெறுவார்கள்.
2. பணியை குறி வைக்கலாம்
குறிக்கோள் தெளிவாக இருக்கும்போது நம் பணியில் எந்த தொய்வும், தொந்தரவும் இருக்காது. நாம் செய்ய வேண்டியதை நிறைவாக செய்வோம். ஒவ்வொரு நாளும் பணியை குறி வைத்து தாக்கலாம். தாக்கி தடம் பதிக்கலாம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு தன் தந்தையோடு கொண்ட அந்த உறவு தான் அவரை தன்னுடைய குறிக்கோளை நிறைவு பெறச் செய்தது. மேலும் அவருடைய பணியை மிகச் சிறப்பாக செய்ய காரணமாக இருந்தது. நாமும் செய்வோம். செயல்படுவோம்.
மனதில் கேட்க…
1. என் குறிக்கோளில் இடைவிடாமல் செல்ல நான் தினமும் ஜெபிக்கலாம் அல்லவா?
2. என் பணியைச் சிறப்பாக செய்ய ஜெபத்தை கருவியாக நான் பயன்படுத்துவேனா?
மனதில் பதிக்க…
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்(யோவா 15:7)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா