முரண்பாடு
இயேசு மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி வருந்துகிறார். தனது வருத்தத்தை சந்தைவெளியில் சிறுபிள்ளைகளின் மனப்பாங்கில் வெளிப்படுத்துகிறார். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையை இந்த உவமை வாயிலாக இயேசு படம்பிடித்துக்காட்டுகிறார்.
இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப்பார்த்தனர்? என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக்கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய முரண்பாட்டை இயேசு வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். அவர்களின் செயல்பாடு, உண்மையை ஏற்றுக்கொள்ளத்தாங்கள் தயாராக இல்லை என்பதைக்குறித்துக் காட்டுவதாக இயேசு சொல்கிறார். எதையும் குற்றம் காண வேண்டும் என்கிற அவர்களின் மனப்போக்கு, சரியானது அல்ல என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.
உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். எதையும் திறந்த மனதோடு, மனநிலையோடு பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நமது வாழ்வே எதிர்மறையான வாழ்வாக மாறிவிடும். பரிசேயர்களும், சதுசேயர்களும் அடிப்படையில் நல்லவர்கள் என்றாலும், எதையும் குற்றம் காணும் நோக்கும், திறந்த மனநிலையோடு பார்க்காத குறையும் தான், இன்றைக்கு அவர்களை, எதிர்மறையாகப்பார்க்கத் தூண்டுகிறது. நாம் எதையும் திறந்த மனநிலையோடு பார்ப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்