முயற்சி தரும் நிறைவு
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – போன்ற வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கக்கூடிய சொற்களாக இருக்கிறது. இந்த சொற்களின் அடிப்படையான பொருள்: முயற்சி. முயன்றால் நாம் பெற முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சி தான், நமது விசுவாச வாழ்வின் அடித்தளம். அந்த முயற்சியைப் பற்றிப்பிடித்து விட்டால், நாம் இந்த உலகத்தில் அடைய நினைப்பதை நிச்சயமாக அடைய முடியும்.
நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறிகளாக வாழக்கூடாது. எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் நம்மை விட எத்தனையோ பேர் குறைகளோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது. அது நமது பார்வையில் நியாயமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, மிக உறுதியாக வாழ்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறார்கள். தடைகளையும், சோதனைகளையும் வலிமையோடு வென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்கு சிறந்த உதாரணங்களாக வாழ்வில் இருக்கிறார்கள்.
கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற வாழ்வை, நாம் ஒருமுறை தான் வாழ முடியும். அந்த வாழ்வை நாம் முயற்சியோடு வாழ்வோம். எந்த சூழ்நிலையிலும் துவண்டுவிடாது, நம்பிக்கையை பற்றிப்பிடித்துக் கொண்டு, தொடர்ந்து முன்னேறுவோம். எதனையும் கருத்தில் கொள்ளாமல், முயன்று, வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்