முன் மாதிரி
யோவான் 13 : 1-15
பாஸ்கா திருவிழா இஸ்ரயேலரின் பெரும் விழா. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து செங்கடலைக் கடந்து உரிமைப் பேறு பெற்றவர்களாய் மாறியதை நினைத்துக் கொண்டாடுகின்ற ஒரு பெருவிழா. பாஸ்கா விழா தொடங்க இருந்த நாளில் இயேசு நற்கருணையை உண்டாக்கியது அவர் நமக்களித்த விடுதலையையும், உரிமைப் பேற்றையும் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரயேலர் அனைவரும் எகிப்திலிருந்து மீட்கப்பட்டு விடுதலைப் பெற்றதற்காக, அவர்கள் இவ்விழாவினை நன்றியின் விழாவாகவும் நினைவு கூர்கிறார்கள். நாம் கொண்டாடுகின்ற நற்கருணைப் பலியும் நன்றியின் பலியே. நற்கருணை என்ற சொல்லுக்கே ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு நன்றி என்பதே பொருள்.
என் உடல், என் இரத்தம் நற்கருணையே நமது வாழ்வின் மையம், ஊற்று. நற்கருணை இல்லாமல் திருஅவை இல்லை. குருத்துவமில்லாமல் நற்கருணை இல்லை. இந்த மூன்றும் இல்லாமல் கிறித்தவம் இல்லை. இன்று பல சபைகள் நற்கருணை இல்லாமலே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடக்கக் கிறித்தவர்களை ஒன்றிணைத்ததே இந்த நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே அனைத்தும் அரங்கேறின. குகைகளிலும், குழிகளிலும் கொண்டாடப்பட்டு, காக்கப்பட்டு வந்த இந்த நற்கருணையின் மேன்மையை நாம் முழுமையாக உணர்கிறோமா?
இரத்தம் இறைவனின் மீட்புச் செயலுக்கு அடையாளம். இந்த இரத்தம்தான் இறைவன் மக்களுக்காகத் தன்னுயிரைக் கொடுத்ததை நினைவுபடுத்துகிறது. இவ்விரத்தமே மக்களின் விடுதலையைச் சுட்டுகின்றது. “ இவ்விரத்தத்தைக் காணவே நாம் உங்களைக் கடந்து போவோம்” (விப 12:13). இயேசுவின் இரத்தமும் நமது விடுதலைக்காகச் சிந்தப்பட்டது. செம்மறியின் இரத்தத்தால் சாவினின்று தப்பினர் இஸ்ரயேல் மக்கள். இயேசுவின் இரத்தத்தால் பாவச் சாவினின்று நாம் தப்புவோம்.
என் நினைவு : நமக்கு ஆண்டவர் கொடுத்த கட்டளைகளில் இதுவும் தலையானது. ஒருவேளை ஆண்டவர் இவ்வார்த்தையைக் கூறாமல் விட்டிருந்தால், இன்று ‘இயேசு’ என்ற ஒருவர் வந்ததே நமக்குத் தெரியாமல் போயிருக்கும். நாம் நிறைவேற்றுகின்ற ‘தெய்வீகத் திருப்பலி’ இந்த நினைவுப் பரிசே. இந்த நாளில் அகில உலகக் குருக்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். அனைவரும் தங்களது உன்னத அழைப்பின் மேன்மையை உணர்ந்து, தங்களின் பணி, பணிவிடை செய்வதே என்பதை உணர்ந்து, இன்னும் திருஅவையின் மேன்மையையும், இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழவும், நம்மை நல்வழிப்படுத்தவும் இந்நாள் அவர்களை இயக்குவதாக.
– திருத்தொண்டர் வளன் அரசு