முன்சார்பு எண்ணங்களைக் களைவோம்
இயேசு ஒரு புதிய மனிதராக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். போதகர் என்ற அடையாளத்தோடு, அவருடைய சீடர்களோடு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில் போதகர்கள் எனப்பட்டவர்கள் தங்களுடைய சீடர்களோடு ஊர், ஊராகச்சென்று, போதிப்பது வழக்கமாக இருந்தது. போதகர்களை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். போதகர்களுக்கு மக்கள் நடுவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. நோய்கள் குணமாக போதகர்களை செபிக்க சொல்வதும், அவர்களின் போதனைகளைக்கேட்பதற்கு செல்வதும் மக்களுக்கு பழக்கமானதாக இருந்தது.
இந்த நற்செய்தியில் இயேசுவின் போதனையைக்கேட்க இயேசுவுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அங்கே நிச்சயம் இருந்திருப்பார்கள். இயேசுவைப்பற்றி மக்கள் பேசுவதைக் இதுநாள் வரை கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது நேரிடையாக அவரின் போதனையைக் கேட்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய போதனையைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், இயேசுவைப்போற்றுவதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள். அதற்குக்காரணம் இயேசு நன்றாக போதிக்கவில்லை என்பது அல்ல: மாறாக, அவர்களின் முன்சார்பு எண்ணம். ஏனென்றால், இயேசுவினுடைய போதனையைக்கேட்ட அவருடைய சொந்த ஊர் மக்களும், அவருடையப்போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனாலும், அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். காரணம், அவர்களுடைய இந்த முன்சார்பு எண்ணம் (Pசநதரனiஉந). ‘இவருடைய குடும்பத்தைப்பற்றி தெரியாதா?’ என்ற முன்சார்பு எண்ணம் தான், இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.
நாமும் இறையாட்சிக்கு தகுதி பெறுவதற்கு தடையாக இருப்பது இத்தகைய முன்சார்பு எண்ணம் தான். நான் மட்டும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பரிசேயருடைய முன்சார்பு எண்ணம் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து அதைக்களைய முற்படுவோம். இறையாட்சிக்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்வோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்